அதிகாரத்தில் இருப்பவர்கள் சீனா பெயரை சொல்லவே பயந்து நடுங்குவது ஏன்?: காங்கிரஸ் கேள்வி

தினகரன்  தினகரன்
அதிகாரத்தில் இருப்பவர்கள் சீனா பெயரை சொல்லவே பயந்து நடுங்குவது ஏன்?: காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ‘‘இந்திய எல்லைக்குள் நுழைந்த சீனாவின் பெயரை  குறிப்பிடுவதற்கு கூட, ஆட்சியில் இருப்பவர்கள் பயப்படுவது ஏன்?’ என்று காங்கிரஸ்  கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிவைத்து  பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், ‘எல்லைக்கட்டுப்பாடு கோடு முதல் உண்மையான கட்டுப்பாடு கோடு பகுதி வரை  நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுத்தவர்களுக்கு இந்திய வீரர்கள் தகுந்த  பதிலடி கொடுத்தனர்,’ என்று குறிப்பிட்டார். சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டே இவ்வாறு அவர் பேசினார். மேலும், அவர் தனது உரையில் எங்குமே சீனா, பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் எல்லை பிரச்னையை பற்றி பேசினார்.இது குறித்து காங்கிரஸ் மூத்த செய்தி தொடர்பாளரான ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நேற்று அளித்த பேட்டி வருமாறு: காங்கிரசை சேர்ந்த ஒவ்வொருவரும், 130 கோடி இந்திய மக்களும் நமது  வீரர்களால் பெருமை அடைகிறோம். அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். ஒவ்வொரு  முறை தாக்குதல் நடத்தும் போதும் சீனாவிற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடியை  வழங்கினார்கள். அதற்காக அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். ஆனால், ஆட்சி  அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு என்ன ஆயிற்று? சீனாவின் பெயரை  குறிப்பிடுவதற்கு அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? இந்த சுதந்திர தினத்தில், ‘நமது நாட்டை பாதுகாப்பதற்காகவும், சீன வீரர்களை திரும்ப பெற வைப்பதற்காகவும் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?’ என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அதுதான், ஜனநாயகத்தின் உண்மையான உணர்வாகும். நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை  மத்திய அரசு விற்கிறது. ரயில்வே மற்றும் விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கிறது.  எல்ஐசி முதல் எப்சிஐ வரை அனைத்தின் மீதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி  தாக்குதல் நடத்துகிறது. இந்த அரசினால் நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பாக  வைத்திருக்க முடியுமா? நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசு மற்றும்  ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.தனது பேட்டியில் மத்திய அரசுக்கு சுர்ஜேவாலா எழுப்பிய கேள்விகள்:1 மத்திய அரசுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை  உள்ளதா? 2 மக்கள் கூறும் கருத்துக்கள் மீது நம்பிக்கை உள்ளதா? 3 மக்களுக்கு பேச்சு, சிந்தனை, பயணம், விரும்பியதை அணிவது,  வாழ்வாதாரத்துக்காக பணம் ஈட்டுவது போன்ற சுதந்திரங்கள் உள்ளதா?4 அல்லது, இந்த சுதந்திரங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டுள்ளதா?

மூலக்கதை