தெலங்கானாவில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் 1.10 கோடி லஞ்சம் வாங்கிவசமாக சிக்கிய தாசில்தார்

தினகரன்  தினகரன்
தெலங்கானாவில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் 1.10 கோடி லஞ்சம் வாங்கிவசமாக சிக்கிய தாசில்தார்

திருமலை: தெலங்கானா மேட்சல் மாவட்டத்தில் நிலப்பிரச்னையை தீர்க்க ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் 1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தாரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம் ராம்பள்ளியை சேர்ந்தவர் நாத். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 28 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல் இருந்து வந்ததாம். எனவே, நிலப்பிரச்னையை தீர்க்க அதேபகுதியை சேர்ந்த அஞ்சிரெட்டியிடம் கேட்டுள்ளார். அவரது உதவியுடன் கீசரா மண்டல தாசில்தார் நாகராஜை அணுகியுள்ளார். இப்பிரச்னையை தீர்க்க 1.10 கோடி தரவேண்டும் என தாசில்தார் கேட்டாராம். அதன்படி, பணத்தை நேற்று முன்தினம் இரவு தருவதாக நாத் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாசில்தார் நாகராஜ் வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். இரவு 10.15 மணியளவில் நாத்தும் அஞ்சிரெட்டியும் பணப்பையுடன் தாசில்தார் வீட்டுக்குள் சென்றனர். அவர்களிடம் இருந்து பணத்தை பெற்ற தாசில்தார் நாகராஜ், அவற்றை எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது, அதிரடியாக உள்ளே சென்ற ஊழல் தடுப்பு பிரிவு போலீசார், தாசில்தார் நாகராஜை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 1.10 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தாசில்தார் வீட்டில் விடிய, விடிய அதிகாலை 4 மணி வரை சோதனை நடத்தினர். இதில், பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அவற்றையும் பறிமுதல் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், லஞ்சம் கொடுக்க வந்த நாத், அஞ்சிரெட்டி ஆகியோரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே சிக்கியவர்தற்போது கைதாகியுள்ள தாசில்தார் நாகராஜ், ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்துள்ளார். வெளியே வந்ததும் மீண்டும் லஞ்ச வேட்டையை தொடங்கி சிக்கி இருக்கிறார்.

மூலக்கதை