கமலா வந்ததால் களேபரம் இந்தியர்கள் வாக்கை பெற அதிபர் டிரம்ப் புது வியூகம்: மதத்துக்கு ஒரு குழுவை அமைத்து வேட்டை

தினகரன்  தினகரன்
கமலா வந்ததால் களேபரம் இந்தியர்கள் வாக்கை பெற அதிபர் டிரம்ப் புது வியூகம்: மதத்துக்கு ஒரு குழுவை அமைத்து வேட்டை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் மிகுந்த முக்கியத்துவம் பெறும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால், அவர்களை வாக்குகளை பெறுவதற்கு ஏற்ற வகையில்  தனது பிரச்சார யுக்திகளை டிரம்ப் மாற்றி அமைத்துள்ளார். வரும் நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் 2வது முறையாக போட்டியிடும் 74 வயதான அதிபர் டிரம்பை எதிர்த்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த 77 வயதாகும் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே, கருத்து கணிப்பில் டிரம்ப்பை முந்தி வருகிறார். இந்நிலையில், பிடென் தனது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசை தேர்வு செய்து அறிவித்தார். இது, இத்தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. கருப்பின தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்த கமலாவால், இந்த 2 பிரிவு மக்களின்  வாக்குகளும் ஜனநாயக கட்சிக்கு கணிசமாக கிடைக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இது, பிடென், கமலாவின் வெற்றி வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கி இருக்கிறது. டிரம்ப்பும் பிரதமர் மோடியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அமெரிக்கா சென்ற மோடி, அங்கு டிரம்ப்புக்கு ஆதரவாக ‘ஹவ்டி மோடி’ என்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார். இதில், லட்சக்கணக்கான இந்தியர்கள் கலந்து கொண்டனர். இதில், டிரம்ப்பும் கலந்து கொண்டார். இதனால், இந்திய வம்சாவளி மக்கள் இடையே டிரம்ப்பின் செல்வாக்கு அதிகமானது. ஆனால், கமலாவின் தேர்வு மூலமாக இந்த வாக்குகள் தற்போது அவர் பக்கம் திரும்பும் நிலை உருவாகி இருக்கிறது.ஏற்கனவே, தோல்வியின் விளிம்பில் இருக்கும் டிரம்ப், இந்த திடீர் திருப்பத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்திய வம்சாவளி மக்கள் வாக்குகளின்  முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள டிரம்ப், அவர்களை கவர்வதற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.* முதல் கட்டமாக, எச்1பி விசாவுக்கு முழுமையாக விதிக்கப்பட்ட தடையை நேற்று முன்தினம் திடீரென தளர்த்தினார்.* அடுத்தக்கட்டமாக, இந்தியர்களை வாக்குகளை பெறுவதற்கான பிரசார யுக்தியை மாற்றி இருக்கிறார்.*  இதன்படி, இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், தெற்காசிய மக்கள் என ஒவ்வொரு தரப்பின் வாக்குகளையும் பெறுவதற்காக, மதவாரியாக தனித்தனி சிறப்பு குழுக்களை அமைத்துள்ளார். * இந்த குழுக்களுக்கு அவர் தனித்தனி பெயரையும் சூட்டியுள்ளார். அவை வருமாறு: 1‘டிரம்புக்கான இந்தியர்கள் குரல்’2 ‘டிரம்புக்கான இந்துக்கள் குரல்’3 ‘டிரம்புக்கான இஸ்லாமியர் குரல்’4‘டிரம்புக்கான சீக்கியர்கள் குரல்’ - மேலும், இந்த குழுக்களுக்கான பிரத்யேகமாக இணையதளங்களும் தொடங்கப்பட்டுள்ளன. * அமெரிக்க அதிபராக மீண்டும் டிரம்ப் தேர்வானால், தங்கள் இன மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்பதை, இந்த குழுவில் உள்ளவர்கள்  தனிப்பட்ட முறையில் தங்கள் இனத்தை சேர்ந்த ஒவ்வொருவரையும் கவரும் விதமான பிரசாரங்களை செய்து வருகின்றனர். தபால் வாக்கு அளிப்பதில் சிக்கல்கொரோனா பீதி காரணமாக, அமெரிக்காவில் இம்முறை தபால் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில், பெரியளவில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இருப்பினும், இந்நாட்டு தேர்தல் ஆணையம், ‘வேறுவழியில்லை’ என்று கூறி விட்டது. அதனால், தபால் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பீிதியால், மக்களும் வரிசையில் நிற்பதை தவிர்த்து விட்டு, தபால் மூலம் வாக்கு அளிப்பதையே அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில், ‘தபாலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய பெட்டிகளை, தேர்தலுக்குப் பிறகு நடக்கும் வாக்கு எண்ணிக்கைக்காக குறித்த நேரத்தில் அனுப்பி வைப்பது சந்தேகம்’ என்று அமெரிக்காவில் உள்ள 46 மாகாணங்கள், கொலம்பியா மாவட்ட நிர்வாகிகளுக்கு தபால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே, புறநகர் பகுதிகளின் பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்த தபால் பெட்டிகள், தபால் துறையில் ஏற்பட்டிருக்கும் நஷ்டம் காரணமாகவும், பயன்பாடு மிகவும் குறைந்த காரணத்தாலும் அகற்றப்பட்டு இருப்பதால், வாக்களிப்பது கடினமாக இருப்பதாக பல்வேறு மாகாணங்களில் இருந்து புகார்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.13 லட்சம் இந்தியர்கள் வாக்குஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க போகும் இந்தியர்களின் மொத்த வாக்கு எண்ணிக்கை 13 லட்சம். இதில், பென்சில்வேனியாவில் உள்ள 2 லட்சம் வாக்குகளும், மிச்சிகனில் உள்ள 1,25,000 வாக்குகளும் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

மூலக்கதை