சோனியா காந்தி சுதந்திர தின அறிக்கை ஜனநாயகத்திற்கு சோதனை காலம்: சுதந்திரம் இருக்கிறதா? மக்கள் சிந்திக்க வேண்டும்

தினகரன்  தினகரன்
சோனியா காந்தி சுதந்திர தின அறிக்கை ஜனநாயகத்திற்கு சோதனை காலம்: சுதந்திரம் இருக்கிறதா? மக்கள் சிந்திக்க வேண்டும்

புதுடெல்லி: ‘நாட்டின் ஜனநாயகத்திற்கு சோதனையான காலம் இது. இங்கு கேள்வி கேட்கவோ, மறுக்கவோ அல்லது பொறுப்பேற்பதை எதிர்பார்க்கவோ சுதந்திரம் இருக்கிறதா? என்று மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்,’ என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது சுதந்திர தின செய்தியாக நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, நாடு தனது ஜனநாயக மதிப்புகளை அவ்வப்போது சோதித்து தொடர்ந்து அதனை மேம்படுத்தி வருகிறது. தற்போதைய அரசு, ஜனநாயக அமைப்பு, அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் மரபுகளுக்கு முரணாக நிற்கிறது. எனவே, இதுகூட இந்திய ஜனநாயகத்தை சோதிக்கும் காலமாக உள்ளது.சுதந்திரம் என்றால் என்ன என்பதை அனைத்து மக்களும் ஆராய்ந்து சிந்தித்து பார்க்க வேண்டும். இன்று நாட்டில் எழுத, பேச, கேள்வி கேட்க, மறுப்பு கூற, சுய கருத்துக்களை கொண்டிருக்க, பொறுப்பேற்பதை எதிர்பார்க்க சுதந்திரம் உள்ளதா? ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக ஜனநாயக சுதந்திரத்தை காக்க தேவையான முயற்சிகளையும் போராட்டங்களையும் மேற்கொள்வது எங்கள் பொறுப்பு. இந்தியா தனது ஜனநாயக மதிப்புகள், பலதரப்பட்ட மொழிகள், மதங்கள் மற்றும் பிரிவுகளின் பன்மைத்துவத்திற்காக மட்டுமல்லாமல், ஒற்றுமையுடன் துன்பங்களை எதிர்கொள்ளும் தன்மைக்காகவும் உலகம் முழுவதும் தனித்து அறியப்படுகிறது. இன்று, முழு உலகமும் கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் போராடி வருகிறது. இந்த தொற்றுநோயை இந்தியா ஒற்றுமையாக தோற்கடித்து ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இந்த தொற்று நோயிலிருந்தும் கடுமையான பொருளாதார பாதிப்பில் இருந்தும் நாம் அனைவரும் ஒன்றாக வெளியே வருவோம் என்று முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். லடாக் கல்வான் மோதலில் வீரமரணம் அடைந்த நம் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் வீரத்தை மதிக்கவும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவும் அரசை கேட்டுக் கொள்கிறேன். சீன ஊடுருவல்களை முறியடிப்பதும் தாய்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதுமே நம் வீரர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய அஞ்சலியாகும்.  சுதந்திர தினமான இன்று, நாட்டிற்கு ஒரு பிரகாசமான ஜனநாயக எதிர்காலம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை