காலரில் மாஸ்க்; பட்டனில் தெர்மா மீட்டர் வந்து விட்டது கொரோனா ஜாக்கெட்

தினகரன்  தினகரன்
காலரில் மாஸ்க்; பட்டனில் தெர்மா மீட்டர் வந்து விட்டது கொரோனா ஜாக்கெட்

அகமதாபாத்: கொரோனா காலகட்டத்திற்குள் என்னென்ன வரப்போகிறதோ? விதம் விதமான மாஸ்க்குகள், புற்றீசல் போல சானிடைசர்கள், உடைகள் என்று வலம் வரத்துவங்கி விட்டன. இப்போது கொரோனாவில் இருந்து தப்பிக்க வந்து விட்டது ‘கோவெஸ்ட்’ என்ற ஆண்களுக்கான ஹைடெக் மேல்கோட்டு. இந்த கொரோனா ஜாக்கெட்டை வடிவமைத்திருப்பவர் சோமேஷ் சிங். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மத்திய அரசின் நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டிசைன் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். டிசைனர் உடைகளுக்காக இவர் பல்வேறு விருதுகளை பெற்று சாதித்தவர்.  இந்த கோவெஸ்ட் ஜாக்கெட் - பருத்தி, சிந்தடிக், குஜராத்தின் பிரபலமான கருப்பு பிரின்டிங் அர்ஜாக் ரக இழைகள் மற்றும் மருத்துவ ரீதியாக தொற்றுக்களை அண்ட விடாத ஆன்டி வைரஸ் வினோபன் ரக நூல் இழைகள் என நான்கு ரக இழைகளை கொண்ட நான்கு அடுக்கு துணிகளால் நெய்யப்பட்டது.  ஜாக்கெட்டில் காலருடன் இணைந்து மாஸ்க் இணைக்கப்பட்டிருக்கும். காலரை போடும்போதே இந்த மாஸ்க் திறந்துகொள்ளும். அதை அப்படியே அணிந்து கொள்ளலாம்.  அடுத்து, பாக்கெட்டில் சானிடைசர் தயாராக இருக்கும். பாக்கெட்டை திறந்ததும், தொழில்நுட்பத்துடன் கூடிய எல்இடி ஒளி கிடைக்கும். அதில் தெர்மாமீட்டர் இணைக்கப்பட்டிருக்கும். பாக்கெட்டை திறந்தாலே எல்இடி ஒளியில் தெர்மாமீட்டரில் உங்களின் உடல் வெப்ப அளவு  தெரிந்து விடும். இன்னொரு முக்கிய அம்சம், சமூக இடைவெளி சென்சார். கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் இருந்து தள்ளி நிற்க 2 மீட்டர் இடைவெளி தேவை என்பதால் 2 மீட்டர் சுற்றளவுக்குள் யாராவது இருப்பின் இந்த சென்சார் காட்டிக்கொடுத்து விடும். உடனே, அங்கிருந்து நகர்ந்து விடலாம். ‘ இந்த ஜாக்கெட் எல்லா அளவுகளிலும் கிடைக்கும். விலை  4,999. போகப்போக இதன் விலை குறைய வாய்ப்புண்டு என்கிறார் சோமேஷ் சிங்.  ஐஎஸ்ஓ 45001 சான்றிதழ் கிடைத்ததும்  அடுத்த மாதம் இது விற்பனைக்குவர உள்ளதாம்.

மூலக்கதை