சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முன்னாள் கேப்டன் தோனி திடீர் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முன்னாள் கேப்டன் தோனி திடீர் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மகத்தான சாதனை வீரருமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து  ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தோனி (39), கடந்த 2004ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள்  போட்டியில் அறிமுகமானார். ‘மாஹி’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி, 2005ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி விசாகப்பட்டிணத்தில்  பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அதிரடியாக 148 ரன் விளாசியபோது ஒட்டுமொத்த தேசமே கொண்டாடும் நட்சத்திரமாக ஒளிரத்  தொடங்கினார். தனது மின்னல் வேக விக்கெட் கீப்பிங் மற்றும் அதிரடி பேட்டிங் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தவர், மிக வேகமாக முன்னேறி  இந்திய அணியின் கேப்டனாகவும் உயர்ந்தார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை கிரிக்கெட்  போட்டியிலும் அசைக்க முடியாத அணியாக முத்திரை பதித்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி டி20 உலக கோப்பை (2007), ஐசிசி ஒருநாள் உலக  கோப்பை (2011), ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (2013) என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனைத்து டிராபிகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற  மகத்தான சாதனை தோனியின் மகுடத்தில் கோகினூர் வைரமாக ஜொலிக்கிறது. 2014ம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த  போட்டியுடன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த தோனி,  ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சமூக  வலைத்தளத்தில் நேற்று அறிவித்தார். இதையடுத்து, அவரது 15 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அவர் இதுவரை 90 டெஸ்ட் போட்டியில் 4876 ரன்  (அதிகம் 224, சராசரி 38.09, சதம் 6, அரை சதம் 33) எடுத்துள்ளார். 350 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ள தோனி அவற்றில் 10,773 ரன் (அதிகம்  183*, சராசரி 50.57, சதம் 10, அரை சதம் 73) விளாசி உள்ளார். மேலும் 98 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1617 ரன் (அதிகம் 56, சராசரி 37.60,  அரை சதம் 2) எடுத்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஸி. அணிக்கு எதிராக பெங்களூருவில் நடந்த டி20 போட்டியும், ஜூலையில்  நியூசிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த ஒருநாள் போட்டியும் (ஐசிசி உலக கோப்பை அரை இறுதி) இவரது கடைசி சர்வதேச  போட்டிகளாக அமைந்துவிட்டன.ரசிகர்களுக்கு நன்றி: இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் தோனி விளையாடுவாரா என  ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை காரணமாக இந்த தொடர் அடுத்த ஆண்டுக்கு  ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை தனக்கு ஆதரவளித்த  அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி  உள்ளது.விருதுகள்: எந்தவிதமான நெருக்கடியான சூழலிலும் பதற்றம் அடையாமல் தனது சாதுர்யமான வியூகங்களால் வெற்றிகளைக் குவித்த தோனி மத்திய  அரசின் பெருமை மிகு ராஜிவ் காந்தி கேல் ரத்னா (2007), பத்ம  (2009), பத்மபூஷண் (2018) விருதுகள் வழங்கி கவரவிக்கப்பட்டுள்ளார். ஒருநாள்  போட்டிகளில் ஆண்டின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை 2 முறை பெற்ற முதல் வீரர் (2008, 2009) என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சாதனை வீரர்களுள் ஒருவராக பொன்னெழுத்துகளால் தனது பெயரை பொறித்து சர்வதேச  கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றுள்ள தோனிக்கு சக வீரர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.ரெய்னாவும் விடைபெற்றார்!சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக, இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டர் சுரேஷ்  ரெய்னாவும் (33 வயது, முராத்நகர் உ.பி.) தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தார். இந்திய அணிக்காக ரெய்னா 18 டெஸ்ட் (768 ரன்,  அதிகம் 120, சராசரி 26.48, சதம் 1, அரை சதம் 7, விக்கெட் 13), 226 ஒருநாள் போட்டி (5615 ரன், அதிகம் 116*, சராசரி 35.31, சதம் 5, அரை சதம் 36,  விக்கெட் 36) மற்றும் 78 டி20 போட்டியில் விளையாடி உள்ளார் (1605 ரன், அதிகம் 101, சராசரி 29.18, சதம் 1, அரை சதம் 5, விக்கெட் 13). ஐபிஎல்  தொடரில் டோனி, ரெய்னா இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை