திருவனந்தபுரம் மத்திய சிறையில் 217 கைதிகளுக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
திருவனந்தபுரம் மத்திய சிறையில் 217 கைதிகளுக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய சிறையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில்,சில தினங்களுக்கு முன் இங்குள்ள கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த 3 தினங்களாக நடத்தப்பட்ட  பரிசோதனையில் இதுவரை 217 கைதிகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. கைதிகளிடையே கொரோனா பரவுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, புதிதாக சிறைக்கு வரும் கைதிகள் தனி அறைகளில்  அடைக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்ட பிறகே சிறையில் அடைக்கப்படுகின்றனர்.இந்நிலையில், கேரளாவில் நேற்று 1,608 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் மிக அதிகமாக  362 பேர் பாதித்துள்ளனர். நோய் பாதித்தவர்களில் 90 பேர் வெளி  மாநிலங்களில் இருந்தும், 74 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள்.   கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தது மூலமாக, 1,409 பேருக்கு நோய்  பரவியுள்ளது. இதில், 112 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது  என்பதே தெரியவில்லை. இம்மாநிலத்தில் இதுவரை குணமானவர்கள் எண்ணிக்கை 27,779  ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 14,891 பேர் சிகிச்சை   பெற்று வருகின்றனர். நேற்று புதிதாக 7 பேர் இறந்தனர். இதன்மூலம், இம்மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 146  ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை