துவங்குகிறது சென்னை பயிற்சி | ஆகஸ்ட் 14, 2020

தினமலர்  தினமலர்
துவங்குகிறது சென்னை பயிற்சி | ஆகஸ்ட் 14, 2020

சென்னை: கொரோனாவுக்குப் பின் முதன் முறையாக சென்னை அணி வீரர்கள் பங்கேற்கும் பயிற்சி முகாம் இன்று துவங்குகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் செப். 19 முதல் நவ. 10 வரை நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் சென்னை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை நடந்தது. 

இதில் தேறிய கேப்டன் தோனி, ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கும் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்குகிறது. கொரோனாவுக்குப் பின் முதன் முறையாக, இந்திய மண்ணில் நடக்கும் இம்முகாம், வரும் 20ம் தேதி வரை நடக்கும். 

அப்போது வீரர்களுக்கு, சென்னை அணி சார்பில் கொரோனா சோதனை நடத்தப்படும். இதில் தேறும் வீரர்கள் அனைவரும் 22ம் தேதி யு.ஏ.இ., செல்லவுள்ளனர். 

ரசிகர்களுக்கு ‘நோ’

வீரர்கள் அனைவரையும் கொரோனாவில் இருந்து பாதுகாக்க உயர்மட்ட பாதுகாப்பு வளையத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை வீரர்கள் பயிற்சியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

சென்னை அணி நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்,‘‘அணியில் இடம் பெற்ற 16 இந்திய வீரர்களில் 13 அல்லது 14 பேர் பயிற்சியில் பங்கேற்பர். தற்போது அனைவரும் கொரோனா சோதனையில் தேறி வந்துள்ளனர். கிளம்புவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் அடுத்த சோதனை நடத்தப்படும்,’ என தெரிவிக்கப்பட்டது. 

 

எப்போது வருவர்

கொரோனா தடுப்புக்காக தென் ஆப்ரிக்காவில் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் சென்னை அணியில் டுபிளசி, லுங்கிடி செப். 1ல் யு.ஏ.இ., வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்டீஸ் சி.பி.எல்., தொடரில் பங்கேற்கும் இம்ரான் தாகிர், செப். 10க்குள் சென்னை அணியில் இணையலாம்.

 

வந்தார் தோனி

சென்னை அணி கேப்டன் தோனி, ராஞ்சியில் இருந்து சிறப்பு விமானத்தில், நேற்று மாலை 4:45 மணிக்கு சென்னை வந்தார். இவருடன் ரெய்னா, தீபக் சாகர், பியுஷ் சாவ்லா உள்ளிட்ட ஆறு வீரர்கள் வந்தனர்.

 

‘மிஸ்சிங்’ * இந்த சீசனில்

ஐ.பி.எல்., தொடரின் 13 வது சீசனில் கொரோனா பாதுகாப்பு காரணமாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல விஷயங்கள் இம்முறை காணாமல் போகின்றன. 

இதன் படி, 

* சென்னை வீரர்களின் குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஒருவேளை வந்தாலும், அவர்களுடன் இணைந்து பயணம் செய்ய முடியாது. பயிற்சி, போட்டியின் போது குடும்பத்தினர் நெருங்க முடியாது. 

* பிரீத்தி ஜிந்தா (பஞ்சாப்), ஷாருக் கான் (கோல்கட்டா) என பல அணி உரிமையாளர்கள், இம்முறை யு.ஏ.இ., செல்ல மாட்டர்.

* கொரோனா தடுப்புக்கு சமூக இடைவெளி அவசியம் என்பதால் உயர்மட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வர்ணனையாளர்கள் வீரர்களுடன் பேச முடியாது. போட்டி முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்காது.

* ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடக்கவுள்ளன.

மூலக்கதை