ஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020

தினமலர்  தினமலர்
ஸ்டூவர்ட் பிராட்டுக்கு என்ன பிரச்னை | ஆகஸ்ட் 14, 2020

சவுத்தாம்ப்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், ஸ்டூவர்ட் பிராட், மூச்சுத்திணறலை சரி செய்ய ‘இன்ஹேலர்’ பயன்படுத்தினார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 34. பாகிஸ்தானுக்கு எதிராக 2வது டெஸ்டில் பங்கேற்ற இவர், முதல் நாளில் 4வது ஓவர் வீசிய போது சற்று மூச்சு விட சிரமப்பட்டார். இவருக்கு ‘ஆஸ்துமா’ உள்ளதால் ‘இன்ஹேலர்’ கொண்டு வருமாறு கேட்டார். இதற்கு சற்று தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் மைதானத்தில் இருந்தார் பிராட். பிறகு இதை சரி செய்து கொண்டு பந்து வீச்சை தொடர்ந்தார்.

இவருக்கு, ஆஸ்துமா பிரச்னை இருப்பது முதலில் யாருக்கும் தெரியாது. 2015 ஆஷஸ் தொடர் பயிற்சி முகாமில், இதை சக வீரரிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது பிராட் கூறுகையில்,‘‘பிறக்கும் போது மிகவும் சிறு குழந்தையாக இருந்தேன். மூன்று மாத குறைப் பிரசவமாக பிறந்ததால் எனது ஒரு பக்க நுரையீரல் முழுவதும் வளரவில்லை. பாதி தான் உள்ளது. ஏறக்குறைய சாவின் விளிம்பிற்கு சென்று மீண்டேன். இதனால் தான் ஆஸ்துமாவால் அவதிப்படுகிறேன். ஒரு விளையாட்டு வீரராக இது என்னை பாதிக்கவில்லை. மற்றவர்களை விட அரைபங்கு குறைவான நுரையீரலுடன், இத்தனை ஆண்டுகள் விளையாடுகிறேன்,’’ என்றார்.

மூச்சுத்திணறல் தொல்லை இருந்த போதும் 14 ஆண்டுகள் வேகப்பந்து வீச்சாளராக இன்னும் ஜொலிக்கிறார் பிராட். டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் வீழ்த்திய உலகின் 7வது பவுலர் என்ற சாதனையை சமீபத்தில் எட்டியது, கூடுதல் வியப்பு தான்.

மூலக்கதை