அமெரிக்காவின் 'ஆங்கர் பேபி' தான் கமலா ஹாரிஸ்: குடியுரிமை சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவின் ஆங்கர் பேபி தான் கமலா ஹாரிஸ்: குடியுரிமை சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்

வாஷிங்டன்: இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஜனநாயக கட்சி அரசியல் தலைவரான கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தலில், துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.



ஜமைக்காவில் சேர்ந்த கருப்பின தந்தை மற்றும் சென்னையை சேர்ந்த தமிழ் பேசும் தாயாரையும் கொண்ட கமலா, கருப்பின பாரம்பரியத்தின்படியே வளர்க்கப்பட்டு உள்ளார். 'கருப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட வேண்டும்' என்ற கொள்கை கொண்டவராக விளங்குகிறார்.

பொருளாதார பேராசிரியரான கமலாவின் தந்தை டொனால்டு ஹாரிஸ், ஜமைக்காவில் இருந்து கலிபோர்னியாவில் குடியேறினார். ஷியாமளா தேவி என்ற சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வந்தபோது கமலா பிறந்தார்.


கமலா பிறந்த காலகட்டத்தில், ஹாரிஸ் - சியாமளா தம்பதியினர் அமெரிக்கா குடியுரிமை பெற்றிருக்கவில்லை. அவர் பிறந்து பல ஆண்டுகள் கழித்து அவரது பெற்றோர் குடியுரிமை பெற்றனர். இவ்வாறு அமெரிக்க குடியுரிமை இல்லாதோருக்கு பிறக்கும் குழந்தையை, 'ஆங்கர் பேபி' என, அமெரிக்காவில் அழைப்பர்.
'அமெரிக்க சட்ட அமைப்பின்படி ஆங்கர் பேபி அரசியலில் முக்கிய பதவியில் போட்டியிட இயலாது. ஆனால் கமலா ஒரு ஆங்கர் பேபியாக இருந்துகொண்டு துணை அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.


'கமலாவை துணை அதிபர் வேட்பாளராக முன்னிறுத்த சட்டத்தில் இடம் உள்ளது' எனக் கூறிய ஜனநாயக கட்சி வழக்கறிஞரை, 'அதிபுத்திசாலி' என, டிரம்ப் கிண்டலாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமர்சித்துள்ளார்.

இதேபோல், முன்னர் ஜனநாயக கட்சி சார்பாக கருப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அதிபராக வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, அப்போது குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் ஒபாமாவின் பூர்வீகம் குறித்து விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை