மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொரோனா தொற்று நோயில் இருந்து குணமடைந்தனர்!!

தினகரன்  தினகரன்
மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொரோனா தொற்று நோயில் இருந்து குணமடைந்தனர்!!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. எனினும், வீட்டிலேயே சில நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அமித்ஷாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று தனக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் \'நெகடிவ்\' என்று வந்துள்ளதாகவும், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார். கொரோனாவால்  பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைந்துள்ளார்.சில தினங்களுக்கு முன்னதாக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது என்றும் அந்த சோதனையில்  ஆளுநருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்தது. கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்  கொரோனாவால்  பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைந்துள்ளார் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை