கேரளா விமான விபத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா..: தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார் பினராயி விஜயன்!

தினகரன்  தினகரன்
கேரளா விமான விபத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா..: தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார் பினராயி விஜயன்!

திருவனந்தபுரம்: கேரள விமான விபத்தின்போது மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த ஆகஸ்டு 7ம் தேதி இரவு துபாயில் இருந்து 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான  நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையின் முடிவில் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் இரண்டாக உடைந்தது. இச்சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 18 பேர் உயிரிழந்தனர். சிலர் படுகாயமடைந்தனர். விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்தவர்கள் கொரோன வைரஸ் தொற்றை குறித்து ஏதும் யோசிக்காமல் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அதேபோல் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு விரைவாக மீட்புப்பணியை முடிவுக்கு கொண்டு வந்தனர். துபாயில் இருந்து வந்த விமானம் என்பதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என கேரள அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 கேரள அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோழிக்கோடு விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை