ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு - அசோக் கெலாட் அரசு வெற்றி!

தினகரன்  தினகரன்
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு  அசோக் கெலாட் அரசு வெற்றி!

ராஜஸ்தான்:  சச்சின் பைலட் உடனான சமரத்தினால், ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெலாட் அரசு வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களாக ராஜஸ்தான் மாநில அரசு, தற்போது நெருக்கடியிலிருந்து தப்பியுள்ளது. அதாவது ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. அதிருப்தியாளரான மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. துணை முதல்வராக சச்சின் பைலட் இருந்து வந்தார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது. இதனையடுத்து சச்சின் பைலட் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தனியே முகாமிட்டிருந்தார். இதற்கிடையில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டமானது நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. இதன்பின்னர் அதிரடி நடவடிக்கையாக சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து சச்சின் பைலட், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இவ்வாறு ராஜஸ்தான் அரசியல் களத்தில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் தற்போது 2 நாட்களுக்கு முன்பு  தலைநகர் டெல்லிக்கு வந்த சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்டுள்ள கடும் மோதலை தடுக்க 3 பேர் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது. மேலும் இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் முதலமைச்சர் அசோக் கெலாட்டை, சச்சின் பைலட் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடானது நீங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டமானது சுமார் 3 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்றது. இதனையடுத்து கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பானது நடத்தப்பட்டுள்ளது. சுமார் 200 எம்.எல்.ஏக்கள் கொண்ட சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில், அதிகப்படியான வாக்குகளை பெற்று அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி அசோக் கெலாட் தலைமையிலான அரசு பதவியேற்றது. இதனையடுத்து எஞ்சியுள்ள ஆண்டுகளுக்கு அவர் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பார் என வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகியுள்ளது.

மூலக்கதை