நெல்லையில் சாதனை படைக்கும் நுண்உர செயலாக்க மையங்கள்: 25% கூடுதல் மகசூலால் விவசாயிகள் மகிழ்ச்சி

தினகரன்  தினகரன்
நெல்லையில் சாதனை படைக்கும் நுண்உர செயலாக்க மையங்கள்: 25% கூடுதல் மகசூலால் விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை: நெல்லை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நுண்உர செயலாக்க மையங்கள் மூலம் கிடைக்கும் இயற்கை உரங்களை பெறுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்த உரங்களை பயன்படுத்துவதால் 25 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைத்து வருவதாக மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சியில் தினமும் 110 டன் மக்கும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ராமையன்பட்டியில் உள்ள குப்பை கிடங்கில் மொத்தமாக கொட்டப்பட்டு வந்தன. குப்பைகளை அங்கு மொத்தமாக கொட்ட அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நெல்ைல மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற கண்ணன் மாநகர பகுதிகளில் நுண்உர செயலாக்க மையங்களின் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மாநகராட்சியில் 41 இடங்களில் செயல்பட்டு வரும் மையங்களில் அதிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. பாளை மண்டலத்தில் உதவி கமிஷனர் பிரேம் ஆனந்த் உத்தரவின் பேரில் நுண்உர செயலாக்க மையங்களில் இயற்கை முறையிலான காய்கறி சாகுபடியும் அதிகரிக்கப்பட்டது. அம்மையம் அமைந்துள்ள பகுதிகளிலேயே வெண்டைக்காய், கத்தரிக்காய், பீட்ரூட், முள்ளங்கி, சுரைக்காய், காலிபிளவர், வாழை, பப்பாளி, முருங்கை உள்ளிட்டவை இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்டன. நெல்லை மாநகராட்சி வார்டு எண் 18 வேலவர் காலனியில் இயற்கை உரங்கள் மூலம் கரும்பு விளைவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன், மேற்பார்வையாளர் முருகன், தூய்மை இந்தியா திட்ட பணியாளர் கனகபிரியா ஆகியோர் அடங்கிய குழுவினர் தினமும் நுண்உரக்கிடங்குகளில் இயற்கை உரம் மூலம் கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். தற்போது கரும்பு 6 அடி முதல் 10 அடி உயரம் வரை வளர்ந்துள்ள நிலையில், அவற்றை மாநகராட்சியின் மற்ற நுண்உரக்கிடங்குகளில் விளைவிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை மாநகராட்சியின் இயற்கை உரம் தயாரிப்பை பின்பற்றி மற்ற மாநகராட்சிகளும் தற்போது இயற்கை உரம் தயாரிப்பில் இறங்கியுள்ளன. விஜயநாராயணத்தில் கப்பல் படைத்தளத்தினர் தங்கள் பகுதியில் ‘மியாவாகி’ காடுகளை வளர்க்க இத்தகைய இயற்கை உரங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். தோட்டக்கலைத்துறையினரும் நெல்லை மாநகராட்சியின் இயற்கை உரங்களை வாங்கி சென்றுள்ளனர்.  நுண்உர மையங்களில் வெளியாகும் இயற்கை உரங்கள் 25 சதவீதம் கூடுதலான மகசூலை தருவதால் விவசாயிகளும் இதை வாங்கி செல்ல அதிக மும்முரம் காட்டுகின்றனர்.

மூலக்கதை