மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க இந்த ஆண்டே அமல்படுத்த கோரிய வழக்கு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!!

தினகரன்  தினகரன்
மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க இந்த ஆண்டே அமல்படுத்த கோரிய வழக்கு  மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி:  மருத்துவ படிப்பில் இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய அரசு மற்றும் கவுசிலுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. தமிழக அரசால் தொடரப்பட்ட இந்த வழக்கானது இன்று நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க, மத்திய அரசு மட்டுமல்லாது இந்திய மருத்துவ கவுன்சிலும் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரையில், அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி திமுக, அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. அந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமானது ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தடைவிதிக்க மறுத்து விட்டது. இதனால் அடுத்தாண்டிலிருந்து இடஒதுக்கீடு முறையானது அமலில் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து குழு ஒன்று அமைத்து 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து தமிழக அரசானது இந்த ஆண்டே மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தது. இந்தநிலையில் வழக்கானது இன்று நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க, மத்திய அரசு மட்டுமல்லாது இந்திய மருத்துவ கவுன்சிலும் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மூலக்கதை