மலேசியாவில் 3 மாநிலங்களுக்கு கொரோனா பரப்பியதாக சிவகங்கையை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளருக்கு 5 மாதங்கள் சிறை!

தினகரன்  தினகரன்
மலேசியாவில் 3 மாநிலங்களுக்கு கொரோனா பரப்பியதாக சிவகங்கையை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளருக்கு 5 மாதங்கள் சிறை!

கோலாலம்பூர்: மலேசியாவில் 3 மாநிலங்களுக்கு  கொரோனா பரப்பியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் நிசார் முகமது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 5 மாதம் சிறை தண்டனையும் ரூ21 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் கெடா மாநிலத்தில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிசார் முகமது சபூர் பாட்சா என்பவர் நாசிக் கண்டார் என்ற ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த மாதம்  இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு அவர் திரும்பினார். மலேசியாவின் நிரந்தர குடியுரிமை பெற்ற நிசார் முகமதுவுக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்திய போது அவருக்கு கொரோனா நோய் கண்டறியப்படவில்லை. எனினும் 14 நாட்கள் தனிமையில் தங்கியிருக்க அதிகாரிகள் உத்தரவிட்டு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஓரிரு நாள்களில் தனது உணவகத்துக்குச் சென்று வேலை செய்யத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து மூன்று நாள்கள் கழித்து அவருக்கு சோதனை செய்தபோது கொரோனா நோய் கண்டறியப்பட்டது. இடைப்பட்ட மூன்று நாள்களில், அவரது பொறுப்பற்ற செயலால் கொரோனா வைரசின் திரிபு எனக் கருதப்படும் ஜெனோம் 614 எனும் அதிக வீரியமுள்ள வைரஸ் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஹோட்டல் பணியாளர்கள் என பல பகுதிகளைச்  சேர்ந்த 45க்கும் மேற்பட்டோருக்கு பரவியது. கொரோனாவை கடுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில் நிசார் முகமதுவால் 45 பேருக்கு கொரோனா பரவியதால் இதற்கு சிவகங்கை கிளஸ்டர் எனவும் மலேசிய அரசு பெயரிட்டது. சிவகங்கை கிளஸ்டர் மூலம் 3 மாநிலங்களுக்குத் தொற்று அதிவேகத்தில் பரவியது. இதனால், பல இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்த நிலையில் நேசர் முகம்மது சாபுர் பாட்சா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அந்த விசாரணையில் அவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையையும்  12,000 மலேசிய ரிங்கிட் அபராதமும் விதித்து மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை