பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்!

தினமலர்  தினமலர்
பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்!

வாஷிங்டன்: முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கடந்த 2008ம் ஆண்டு இதேபோன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், 'அமெரிக்காவில் பிறந்தவர்தான் அதிபராக வேண்டும்' என, சர்ச்சையை கிளப்பினர். இப்போது கமலா ஹாரிஸுக்கும் இதே சிக்கலை உண்டாக்க முயல்கின்றனர்.



கடந்த 2008ம் ஆண்டு அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமாவை வீழ்த்தும் திட்டத்தில் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை என்று குடியரசுக் கட்சியினர் புகாரை எழுப்பினர். ஒபாமா தனது பிறப்புச்சான்றிதழை வெளியிட்டபோதிலும், 'அவர் ஹவாய் மாநிலத்தில் பிறக்கவில்லை, கென்யாவில் பிறந்தவர்; இந்தோனேசியாவில் பிறந்தவர்' என, சர்ச்சையைக் கிளப்பினர். ஆனால், அனைத்தையும் முறியடித்து அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும், இந்தியாவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர். இயல்பிலேயே அவர் அமெரிக்கர் இல்லாவிட்டாலும் அமெரிக்காவில் பிறந்தவர் என்ற முறையில் அவர் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றவர்.

இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் தேர்தலில் கமலா ஹாரிசை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஜான் ஈஸ்ட்மேன். ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டபின், ஜான் ஈஸ்ட்மேன் ஒரு நாளேட்டில் கமலா ஹாரிஸ் குறித்து கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், 'அமெரிக்க அரசியலமைப்புச் சட்டப்படி அதிபராகவோ, துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். ஆனால், துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிசின் பிறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. துணை அதிபர் பதிவிக்கு தகுதியானவரா' எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.


இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கிடம் கூறுகையில், ''கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளருக்கான தகுதியைப் பெறவில்லை என்பதை இப்போது தான் கேள்விப்பட்டேன். மிகவும் திறமையான வழக்கறிஞர் ஒருவர் கமலா ஹாரிஸ் பிறப்பு குறித்த விஷயங்களை எழுதியுள்ளார். அது உண்மையா என, எனக்குத் தெரியாது. அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக ஒருவரைத் தேர்வு செய்யும் முன் அவரின் தகுதி குறித்த விவரங்களை ஆய்வு செய்து ஜனநாயகக் கட்சியினர் தேர்வு செய்திருக்கலாம். பலரும் கமலா ஹாரிஸ் பிறப்பால் அமெரிக்கர் இல்லை எனக் கூறுகிறார்கள்' எனத் தெரிவித்தார்.

உண்மையில் கமஹா ஹாரிஸின் தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர். தாய் ஷியாமலா ஹாரிஸ் இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர். கடந்த 1964ம் ஆண்டு அக்., 20ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஒக்லாந்தில் கமஹா ஹாரிஸ் பிறந்தார். அவர் பிறப்பால் இயல்பிலேயே அமெரிக்கர் இல்லாவிட்டாலும் அமெரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் பிரச்சார நிதிக்குழுவின் உறுப்பினர் அஜய் புடோரியா கூறுகையில், 'கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவின் ஒக்லாந்தில் பிறந்தவர். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 2வது பிரிவின்படி அதிபராக ஒருவர் வர வேண்டுமானால் அமெரிக்கராக இருக்க வேண்டும். ஆனால், 1787ம் ஆண்டுக்குப்பின் அமெரிக்காவில் பிறந்து குடியுரிமை இருந்தால் போதுமானது. கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறந்த அமெரிக்கர். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவர் தகுதி குறித்து எதுவும் பேசத் தேவையில்லை. இதுபோன்ற பிறப்புரிமை குறித்து சர்ச்சைகளை குடியரசுக் கட்சியினர்தான் எழுப்புவார்கள். நாட்டுக்கு டிரம்ப் அவமானத்தை தேடித் தருகிறார்' எனத் தெரிவித்தார்.

மூலக்கதை