நீதிபதிகள் செயல்பாடு தொடர்பாக சர்ச்சை கருத்து : மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு; 20ம் தேதி தண்டனை குறித்து விவாதம்!!

தினகரன்  தினகரன்
நீதிபதிகள் செயல்பாடு தொடர்பாக சர்ச்சை கருத்து : மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு; 20ம் தேதி தண்டனை குறித்து விவாதம்!!

புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் பூஷணுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் குறித்து வரும் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டது தொடா்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. ஆனால், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் விவகாரத்தை உச்சநீதிமன்றம் முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த 27ம் தேதி உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து டிவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. பிரசாத் பூஷண் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடினார். இவ்வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தப்போது, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி பூஷணுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. மேலும்,  இதுபோன்ற அவதூறு கருத்துக்களை வெளியிட அனுமதித்த டிவிட்டர் இந்தியா மீதும் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால், நீதிமன்றம் உத்தரவிட்டால் பூஷணின் பதிவுகள் நீக்கப்படும் என நீதிபதிகளிடம்  டிவிட்டர் தரப்பு தெரிவித்தது. கடந்த 5ம் தேதி வாதங்கள் கேட்டறிந்த நிலையில், விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என இன்று தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

மூலக்கதை