உலக அளவில் இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் : முற்றிலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முதல் மாநிலமானது சிக்கிம்!!

தினகரன்  தினகரன்
உலக அளவில் இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் : முற்றிலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முதல் மாநிலமானது சிக்கிம்!!

டெல்லி : உலக அளவில் இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கையில் முதலிடத்திலும் இயற்கை விவசாய பரப்பில் 9ம் இடத்திலும் இந்தியா இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் முற்றிலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முதல் மாநிலமாக சிக்கிம் திகழ்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரிபுரா, உத்தராகண்ட் மாநிலங்களும் இந்த இலக்குகளை அடைந்துள்ளதாக கூறியுள்ளது. நாட்டின் வடகிழக்கு பகுதி இயற்கை விவசாயத்தை பாரம்பரியமாக கொண்டுள்ளது. மலைவாழ் பழங்குடியினர் பகுதிகள் மற்றும் தீவுகளிலும் இயற்கை விவசாயம் செழிப்புடன் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. ரசாயன பயன்பாடு இல்லாமல், இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருவாயை பெருக்கிக் கொள்ள என்ற நோக்கில், வடகிழக்கு பிராந்தியத்திற்கான இயற்கை மதிப்பு சங்கிலி மேம்பாட்டு, இயக்கம் பரம்பராகட் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டங்கள் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டன. பின்னர் 2018ம் ஆண்டு விவசாய ஏற்றுமதிக் கொள்கையின் முடிவு காரணமாக, இந்தியா உலக இயற்கை விவசாய சந்தைகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளி விதைகள், எள், சோயாபீன்ஸ், தேயிலை, மருத்துவ மூலிகைகள், அரிசி, பருப்பு வகைகள் ஆகியவை இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஏற்றுமதியாகும் விவசாயப் பொருட்களாக உள்ளது.  கடந்த 2018-2019ம் நிதியாண்டில் இப்பொருட்களின் ஏற்றுமதி 50% எட்டியதுடன் ரூ.5,151 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அசாம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் இருந்து இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மூலக்கதை