'எச் -- 1பி' விசா தடையில் தளர்வுகள் அறிவிப்பு: இந்தியர்கள் ஓட்டுக்காக மாற்றினார் டிரம்ப்

தினமலர்  தினமலர்
எச்  1பி விசா தடையில் தளர்வுகள் அறிவிப்பு: இந்தியர்கள் ஓட்டுக்காக மாற்றினார் டிரம்ப்

வாஷிங்டன்:அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான 'எச் -- 1பி' விசா நடைமுறையில் அதிபர் டொனால்டு டிரம்ப் சில தளர்வுகளை அறிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட தனிச்சிறப்பு வாய்ந்த துறை நிபுணர்கள் அமெரிக்கா சென்று பணியாற்ற எச் -- 1பி விசா வழங்கப்படுகிறது.இந்த எச் -- 1பி விசா வாயிலாக இந்தியர்களும் சீனர்களும் அதிகம் பயன் பெறுகின்றனர். இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கான கணினி பொறியாளர்கள் அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் 'கொரோனா' வைரஸ் பரவலை தொடர்ந்து அமெரிக்காவில் அதிக அளவில் வேலை இழப்பு ஏற்பட்டது. அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. எனவே அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் எச் -- 1பி விசா தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்படி நடப்பாண்டின் இறுதி வரை எச் -- 1பி மற்றும் எச் -- 4 விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்தார். இது அமெரிக்கா செல்ல விரும்பிய வெளிநாட்டினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விசா கெடுபிடிகளில் அதிபர் டிரம்ப் சில தளர்வுகளை நேற்று அறிவித்தார். அதன் விபரம்:அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்பியவர்கள் மீண்டும் அதே நிறுவனத்தின் வாயிலாக அதே வேலைக்கு திரும்பினால் எச் -- 1பி விசா வழங்கப்படும்.இந்த ஊழியர்களுடன் வரும் மனைவி அல்லது கணவர்களுக்கும் எச் -- 4 விசா வழங்கப்படும். மேலும் தகவல் தொழில்நுட்பம் சுகாதாரத் துறை வல்லுனர்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு தடையின்றி விசா வழங்கப்படும்.அமெரிக்க நிறுவனங்களின் வெளிநாட்டு கிளைகளில் பணியாற்றுபவர்கள் அமெரிக்கா வந்து பணியாற்ற வழங்கப்படும் எல் -- 1 விசாவுக்கும் இந்த தளர்வுகள் பொருந்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ல் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்களின் ஓட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே அதிபர் டிரம்ப் இந்த தளர்வுகளை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை