'கொரோனா தடுப்பு மருந்து கண்டறிய பல ஆண்டு ஆகும்': உலக சுகாதார அமைப்பு

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்பு மருந்து கண்டறிய பல ஆண்டு ஆகும்: உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டறிய, உலகம் முழுவதும் மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷ்ய அதிபர் புடின், ரஷ்யா கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து, அதைத் தன் மகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்ததாக பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா, தடுப்பு மருந்து கண்டறிய தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனமும் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.இந்நிலையில், உலக சுகாதார மருத்துவ விஞ்ஞானி வாஸ் நரசிம்மன் தெரிவித்துள்ளதாவது:பொதுவாக வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மனித இனமே பின்னடைவில் தான் உள்ளது. ஒரு வைரஸ் உலகில் பரவத் தொடங்கினால், அது நம்மையே சுற்றிக் கொண்டிருக்கும். உதாரணமாக அவ்வப்போது வரும் மலேரியா, டெங்கு, இன்ப்ளூயன்சா உள்ளிட்ட வைரஸ்களைக் கூறலாம். மனித இனத்தால் உலகிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது ஒரே ஒரு வைரஸ்தான். அது சின்னம்மை வைரஸ். இதைத்தவிர வேறு எந்த வைரசும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. அவ்வப்போது இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் அதற்கான மருந்துகள் எடுத்துக்கொண்டு மனித இனம் தன்னை தற்காத்துக்கொண்டு வருகிறது.


இதுவரை உலகம் முழுவதும் 7.5 லட்சம் மக்களை பலி வாங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு மாறுபாடுகளை அடைந்துவருகிறது. இதனால் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். தற்போது மருத்துவ விஞ்ஞானிகள் கூற்றுப்படி, கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகும். அதுவரை வைரசின் வீரியத்தை வேண்டுமானால் குறைக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறுகையில், ''இந்தியா உட்பட பல நாடுகளில் தற்போது கொரோனா அச்சம் குறைந்து விட்டது. விரைவில் பூரண குணமடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடையே எழுந்துள்ளது. ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து வாழ்வதே கொரோனாவை விரட்ட ஒரே வழி.கொரோனா வைரஸ் வரும் ஆண்டுகளில் இன்னும் பல்வேறு மாறுபாடுகளை அடையும். அதற்கு ஏற்ப தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து நாம் நம்மை தற்காத்துக் கொள்வதே இதற்கு ஒரே வழி,'' என்றார்.


'இதுவரை கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 29 விதமான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றின் வீரியம் மாறுபடுகிறது. ஒவ்வொரு நாட்டின் காலநிலை, நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி, உணவு, வயது உள்ளிட்ட பல காரணிகள் தடுப்பு மருந்தின் வீரியத்தை முடிவு செய்கின்றன. ஆகவே கொரோனாவை ஒழிக்க ஒரே ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமம்' என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை