74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்; கொரோனா கட்டுப்பாடுகளுடன் உச்சகட்ட பாதுகாப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்; கொரோனா கட்டுப்பாடுகளுடன் உச்சகட்ட பாதுகாப்பு

புதுடெல்லி: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார். இதையடுத்து டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சூழலில் சமூக இடைவெளியுடன் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்புடன் நாளை டெல்லியில் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.

மோடி பிரதமராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றபின், இரண்டாவது முறையாக கொடியேற்ற உள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் குறிப்பிட்ட அழைப்பாளர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.கோவிட்-19 பரிசோதனை செய்யாதவர்களும், பாதிப்புகள் உடையவர்களும் விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று டெல்லி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

என்எஸ்ஜி. கமாண்டோக்கள், குறி பார்த்து சுடும் ஸ்னைப்பர் வீரர்கள், ஸ்வாட் கமாண்டோ படையினர் உள்ளிட்டோர் என 4,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காற்றாடி, டிரோன் விமானங்கள் போன்றவை பறக்காமல் தடுக்க காவல்துறையினரின் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனப்போக்குவரத்தைக் கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையிலான போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர்.

அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை செங்கோட்டையை சுற்றியுள்ள எட்டு முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு (ஐஜிஐ) இந்திய விமானப்படை அனுப்பிய சுற்றிக்கையில், ‘நாளை காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரை எந்த போக்குவரத்து விமானமும் தரையிறங்க அனுமதிக்கப்படாது’ என்று தெரிவித்துள்ளது.முன்னதாக 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்றிரவு 7 மணிக்கு தொலைகாட்சியின் வாயிலாக மக்களிடம் உரையாற்றுகிறார். இதுகுறித்து, இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏஎஸ்ஐ) அதிகாரி கூறுகையில், ‘செங்கோட்டையில், ஒவ்வொரு ஆண்டும் 900 முதல் 1,000 பேர் அமர்வதற்கான வசதிகள் செய்யப்படும்.

ஆனால், இந்த சுதந்திர தினத்தில் சுமார் 250 பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள். பிற்பகலில், ராஷ்டிரபதி பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் ‘கொரோனா வாரியர்ஸ்’ எனப்படும் முன்களப் பணியாளர்கள் கவுரவிக்கப்படுவார்கள்.

பல பகுதிகளில் அமருவதற்கான விரிப்புகளுக்கு பதிலாக நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. விழாவில் பள்ளி குழந்தைகள் பங்கேற்கமாட்டார்கள்’ என்றார்.


.

மூலக்கதை