அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?..அமைச்சர்கள் கடும் அதிருப்தி: உட்கட்சி சண்டையால் தொண்டர்கள் விரக்தி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?..அமைச்சர்கள் கடும் அதிருப்தி: உட்கட்சி சண்டையால் தொண்டர்கள் விரக்தி

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு 8 மாதமே உள்ள நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்த பிரச்னையில் அமைச்சர்களுக்குள் மோதல் எழுந்துள்ளது. மாவட்டங்களை பிரிப்பதிலும், மூத்த அமைச்சர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் அதிமுக உட்கட்சி சண்டையால் தொண்டர்களும் கடும் விரக்தியில் உள்ளனர். தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் பணியில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் அமைச்சர் செல்லூர் ராஜு சில நாட்களுக்கு முன், “தேர்தல் முடிந்த பிறகே எம்எல்ஏக்கள் கூடி அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்வார்கள்” என்று அறிவித்தார். இதிலிருந்து அவர் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க தயாராக இல்லை என்பது தெரியவந்தது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, `எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர். அவரை முன்னிறுத்தி தான் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்’ என்று கூறினார்.



இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் பாஜ துணை தலைவராக உள்ள வி. பி. துரைசாமி, 3 நாட்களுக்கு முன் சென்னையில் பேட்டி அளித்தபோது, `வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டி. பாஜ தலைமையில்தான் கூட்டணி அமையும்’ என்றார்.

அவரது கருத்து அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியா, ஓ. பன்னீர்செல்வமா என்பது குறித்து கட்சியின் நலன் கருதி, கட்சி எடுக்கும் முடிவு.

இந்த நேரத்தில் அதுபற்றி கருத்து சொல்வது ஆரோக்கியமாக இருக்காது. பாஜ துணை தலைவர் வி. பி. துரைசாமி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழக பாஜ தலைவர் முருகன் தான். பாஜ மாநில தலைவர் முருகன் சொன்னால் அதற்கு நாங்கள் பதில் அளிப்போம்.

வி. பி. துரைசாமி கூறியதை பா. ஜ. கவின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது” என்றார். இதே கருத்தைத்தான் அதிமுக எம்பி கே. பி. முனுசாமியும் நேற்று கூறினார்.



வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து கடந்த சில நாட்களாக விவாதம் நடந்து வந்த நிலையில், அதிமுக மூத்த நிர்வாகிகள் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். தற்போதுள்ள உள்கட்சி பிரச்னை குறித்தும், முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அதிமுக அமைச்சர்கள் ஆளாளுக்கு கருத்துக்களை கூறி வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், அதிமுக மாவட்ட செயலாளர் பதவியை இரண்டாக பிரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம், விழுப்புரம் மாவட்டத்தை பிரிக்க கூடாது என்று கூறி கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவு ஒரு டுவிட்டர் பதிவு செய்தார். அதில், “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே” என்ற பாடலை குறிப்பிட்டு இருந்தார்.



நாளை நமதே என்ற வார்த்தை அதிமுக கட்சி தலைவர்களிடம் நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இவர் மறைமுகமாக முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்துகிறாரா? என்ற கருத்தும் தற்போது அதிமுக நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து மூத்த அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி. வி. சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள். குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோரும் ஒதுங்கி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்வாரிய சேர்மனை மாற்றும் விவகாரத்தில் தங்கமணி கூறியதை முதல்வர் கேட்காததும் இதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. இருவருக்குள்ளும் கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து வீட்டுக்கு வந்துள்ள தங்கமணியை மூத்த அமைச்சர்கள் யாரும் சென்று பார்ப்பதில்லை.

முதல்வர் கோபப்படுவார் என்பதற்காக இளைய அமைச்சர்கள் ஒருவர் கூட தங்கமணியை சந்திக்கவில்லை.

அதேநேரத்தில் மற்ற அமைச்சர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே ஏற்படும் மோதல் அதிமுக தொண்டர்களிடையே மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அமைச்சர்கள் சி. வி. சண்முகம், விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களின் மாவட்டங்கள் மட்டும் பிரிக்கப்படவில்லை.

இதனால் இந்த மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் மாவட்டங்களைப் பிரிக்க அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதனாலும் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் எழுந்துள்ளதால், நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

.

மூலக்கதை