‘சுதந்திர’ சதம்: சச்சின் உற்சாகம் | ஆகஸ்ட் 13, 2020

தினமலர்  தினமலர்
‘சுதந்திர’ சதம்: சச்சின் உற்சாகம் | ஆகஸ்ட் 13, 2020

மும்பை: ‘‘எனது முதல் சதம் ஆக., 14ம் தேதி அடித்தேன். மறுநாள் நமது சுதந்திர தினம் என்பதால் இது எப்போதும் எனக்கு ‘ஸ்பெஷல்’ தான்,’’ என சச்சின் தெரிவித்தார். 

இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின் 47. சர்வதேச அரங்கில் ‘சதத்தில்’ சதம் அடித்தார். கடந்த 1990ல் இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட், இரண்டாவது இன்னிங்சில் 119 ரன்கள் எடுத்து, ‘டிரா’ செய்ய உதவினார். இது இவரது முதல் சதம். 30 ஆண்டுகள் ஆன நிலையில், இதுகுறித்து சச்சின் கூறியது:

டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்வது ஒரு கலை. இந்த அனுபவம் எனக்கு புதியதாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான சியால்கோட் டெஸ்ட் (1989), முதல் இன்னிங்சில் 38/4 ரன் என இந்தியா திணறியது. பின் களமிறங்கிய எனது மூக்கில், வக்கார் யூனிஸ் பந்து தாக்கி ரத்தம் கொட்டியது. ‘ஜெர்சி’ ரத்தமாக இருந்தது. வலியுடன் விளையாடி 59 ரன் எடுத்தேன். இப்போட்டி ‘டிரா’ ஆனது. இதுபோன்று அடிபடும் போது, வலிமையாக மீண்டு வர வேண்டும். இல்லையென்றால் காணாமல் போய்விடுவோம். 

இங்கு விதைத்த விதை தான் மான்செஸ்டரில் மரமாக வளர்ந்து நின்றது. முதன் முதலில் ஆக. 14ல் இங்கு தான் சதம் அடித்தேன். மறுநாள் நமது சுதந்திர தினம் என்பதால் இது எப்போதும் எனக்கு ‘ஸ்பெஷல்’ தான். ஆனால் இந்த சதம் காரணமாக, இந்தியாவுக்கு தொடரை ‘டிரா’ செய்யும் வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை