இம்ரான் கானுக்கு மியாண்தத் சவால் | ஆகஸ்ட் 13, 2020

தினமலர்  தினமலர்
இம்ரான் கானுக்கு மியாண்தத் சவால் | ஆகஸ்ட் 13, 2020

கராச்சி: ‘‘நான் தான் உங்கள் கேப்டன், நீங்கள் எனது கேப்டன் அல்ல,’’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, மியான்தத் சவால் விடுத்துள்ளார். 

பாகிஸ்தான் அணி முன்னாள் ‘ஜாம்பவான்’ வீரர் கேப்டன் மியான்தத் 63. கடந்த 1992ல் உலக கோப்பை வென்ற இம்ரான் கான் 67, தலைமையிலான அணியில் இடம் பெற்றவர். கிரிக்கெட்டில் இருந்து அரசியலில் குதித்து, தற்போது பிரதமராக உள்ள இம்ரான் கான் குறித்து மியான்தத் கூறியது:

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் (பி.சி.பி.,) தற்போதுள்ள அனைத்து நிர்வாகத்தினருக்கும் கிரிக்கெட்டின் ஏ.பி.சி., கூடத் தெரியாது. பி.சி.பி., முக்கிய பொறுப்புகளில் வெளிநாட்டினரை ஏன் நியமிக்கின்றீர். 

அந்தளவுக்கு பாகிஸ்தானில் நிர்வாகிகள் பற்றாக்குறை நிலவுகின்றதா. பாகிஸ்தான் மக்களை நம்ப வேண்டும். இங்கு ஊழல் செய்து விட்டு அவர்கள் நாட்டுக்கு சென்று விட்டால் என்ன செய்ய முடியும். இதுகுறித்து இம்ரான் கானிடம் பேச உள்ளேன். நமது நாட்டிற்கு சரிப்பட்டு வராத யாரையும் விட மாட்டேன்.

நான் தான் உங்களுக்கு கேப்டனாக இருந்தேன். நீங்கள் எனது கேப்டன் அல்ல. நான் தான் எப்போதும் உங்களை வழி நடத்தினேன். இப்போது கடவுளைப் போல செயல்படுகிறீர்கள். விரைவில் அரசியலுக்கு வருவேன், உங்களுக்கு சவால் தருவேன். 

யாருக்கும் எதுவும் தெரியாது என்றும், நீங்கள் மட்டும் தான் இந்த தேசத்தில் அறிவாளி போலவும் பேசுகிறீர்கள். மக்கள் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேசத்தை பற்றிய கவலை உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லை. என் வீட்டிற்கு வந்து சென்ற பின் தான் நீங்கள் பிரதமர் ஆக முடிந்தது. இதை உங்களால் மறுக்க முடியுமா.

இவ்வாறு அவர் கூறினார். 

மூலக்கதை