ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் சைக்கிள் ரிக்க்ஷாவில் கொரோனா நோயாளியின் சடலம்...!! ஆந்திராவில் நடந்த அவலம்..!!

தினகரன்  தினகரன்
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் சைக்கிள் ரிக்க்ஷாவில் கொரோனா நோயாளியின் சடலம்...!! ஆந்திராவில் நடந்த அவலம்..!!

ஆந்திரா:  ஆந்திராவில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், கொரோனாவால் உயிரிழந்தவரை சைக்கிள் ரிக்க்ஷாவில் அழைத்து சென்று தகனம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பாபட்லா பகுதியில் 68 வயதுடைய முதியவர் ஒருவர் வசித்து வந்தார். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் பாபட்லா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர், பின்னர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடலை கொண்டு பரிசோதனை மேற்கொண்டதில், முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை உரிய பாதுகாப்புடன் தகனம் செய்வதற்காக, உறவினர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானதால், உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் எந்த வித அறிவிப்பும் தெரிவிக்காமல், கொரோனா பாதிக்கப்பட்ட முதியவரின் சடலத்தை சைக்கிள் ரிக்க்ஷாவில் வைத்து, பாபட்லாவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது உறவினர்களே கொரோனா நோயாளிகளை கொண்டு அடக்கம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து ஆந்திர அரசு 1088 ஆம்புலன்ஸ் வாகனங்களை தொடங்கி வைத்திருந்தாலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் சடலத்தை எடுத்து செல்வதில் அலட்சியம் காட்டி வருவதாக எதிர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில், 108 ஆம்புலன்சில் உயிருடன் இருப்பவர்களை மட்டும்தான் கொண்டு செல்ல முடியும், இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல வேண்டுமென்றால், வேறுவிதமான ஆம்புலன்ஸ் வர வேண்டும். அதற்கு சிறிது கால தாமதம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை