ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு..: 2 போலீசார் உயிரிழப்பு....ஒருவர் காயம்!

தினகரன்  தினகரன்
ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு..: 2 போலீசார் உயிரிழப்பு....ஒருவர் காயம்!

நவ்காம்: ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால்,  அந்த யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் திவீர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், நேற்று நடைபெற்ற ரோந்து பணிகளில் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் செயல்பட்டு வந்த 3 பயங்கரவாத முகாம்களை காவல்துறையினர் தகர்த்தனர். இதற்கு பழிவாங்கும் நோக்கில் ஜம்மு-காஷ்மீரின் நவ்காம் பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவல்துறை முகாம்கள் மீது இன்று அதிகாலை பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த 3 போலீசாரும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரு போலீசார் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அந்த பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை