'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி! சீன போலி நிறுவனங்களில் சோதனை

தினமலர்  தினமலர்
ஹவாலாவில் கைமாறியது ரூ.1,000 கோடி! சீன போலி நிறுவனங்களில் சோதனை

புதுடில்லி : நேற்று, டில்லி, குருகிராம், காசியாபாத் ஆகிய இடங்களில், சீனாவைச் சேர்ந்த சிலர் நடத்தும், இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட அலுவலகங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், சீனாவைச் சேர்ந்த தனிநபர்கள், இந்திய துணை நிறுவனங்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் உதவியுடன், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ரகசிய தகவல்


இது குறித்து, மத்திய நேரடி வரித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சீனாவைச் சேர்ந்த சிலர், இந்தியாவைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து, போலி நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, டில்லி, குருகிராம், காசியாபாத் ஆகிய பகுதிகளில், 21 இடங்களில் செயல்பட்டு வந்த போலி நிறுவனங்களில், வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களில், சீன நிறுவனங்கள், அவற்றின் இந்திய துணை நிறுவனங்கள், ஆடிட்டர்கள் உதவியுடன் போலி நிறுவனங்களை உருவாக்கி, 40க்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை திறந்திருப்பது தெரிய வந்து உள்ளது.

இந்த போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தொகை, சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கும், 'ஹவாலா' பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில், வங்கி அதிகாரிகள், ஆடிட்டர்கள் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதற்கான வலுவான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

இது தொடர்பாக, சீனாவைச் சேர்ந்த, லுவோ சங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், 'சார்லி பென்ங்' என்ற பெயரில், போலி பாஸ்போர்ட் வைத்து உள்ளார். இந்தியாவில், போலியாக சீன நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் பிரதிநிதி போல செயல்பட்டு வந்துள்ளார். இவரிடம், 810 வங்கிக் கணக்குகள் உள்ளது, சோதனையில் தெரிய வந்துள்ளது.

சட்டவிரோதம்


இவர் மட்டுமே போலி நிறுவனங்கள் வாயிலாக, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்துஉள்ளதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அது மட்டுமின்றி, சீனாவுக்கு உளவு பார்த்ததாக லுவோ சங், 2018ல், டில்லி சிறப்பு போலீஸ் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதும், விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

யார் இந்த லுவோ சங்?


வருமான வரி அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ள, லுவோ சங், சீனாவைச் சேர்ந்தவர். இவர், இந்திய பாஸ்போர்ட் பெறுவதற்காக, மணிப்பூர் பெண்ணை மணந்துள்ளார். இதற்காக, 'சார்லி பெங்' என பெயரை மாற்றிக் கொண்டார். சீன அரசின் உளவாளியாக செயல்பட்டு, இந்தியா குறித்த முக்கிய தகவல்களை அனுப்பி வந்துள்ளார்.

அத்துடன், ஹவாலா பரிவர்த்தனை, சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர், தேசத் துரோக குற்றச்சாட்டில், டில்லி சிறப்பு படை போலீசாரால், 2018ல் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளி வந்த அவர், மீண்டும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு, தற்போது கைதாகியுள்ளார். அவரை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை ஆகியவை, காவலில் எடுத்து விசாரிக்க உள்ளன. அப்போது, மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை