யார் தலைமையில் கூட்டணி? பா.ஜ., - அதிமுக., மோதல்!

தினமலர்  தினமலர்
யார் தலைமையில் கூட்டணி? பா.ஜ.,  அதிமுக., மோதல்!

அ.தி.மு.க., -- பா.ஜ., இடையே, வரும் சட்டசபை தேர்தலில், யார் தலைமையில் கூட்டணி என, மோதல் ஏற்பட்டு இருப்பது, அரசியலை சூடுபிடிக்க வைத்துள்ளது.

தி.மு.க.,வில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்து, அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக உள்ள, வி.பி.துரைசாமி, நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில், தி.மு.க.,- - அ.தி.மு.க., என்ற நிலை முன்பிருந்தது. தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,வான கு.க.செல்வம், பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்த பின், தி.மு.க.,- - பா.ஜ., என, அரசியல் களம் மாறியுள்ளது. இது, எங்கள் வளர்ச்சியை காட்டுகிறது.

நாங்கள் யார் பக்கம் இருக்கிறோமோ, அந்த கூட்டணி, சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும். பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். தேசிய கட்சியாக இருப்பதால், எங்கள் கட்சி தலைமையில், கூட்டணி அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.

அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, கே.பி.முனுசாமி கூறியதாவது: நீண்ட காலமாக, தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது, அ.தி.மு.க., தான். தமிழகத்தை முதன்மை மாநிலமாக, அ.தி.மு.க., தலைவர்கள் மாற்றினர்.அவர்கள் வழியில், தற்போது, அவர்களின் தொண்டர்கள் சிறப்பாக ஆட்சி நடத்துகின்றனர். தேர்தல் களத்தை, எங்கள் தலைமையில் சந்திப்போம். தேசிய கட்சியான, பா.ஜ., லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தது. அப்போது, வி.பி.துரைசாமி, பா.ஜ.,வில் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ''பா.ஜ., தலைமையில் கூட்டணி என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் கூறவில்லை. ''அவர் கூறினால், அ.தி.மு.க., தரப்பில், பதில் அளிப்போம். நிர்வாகிகள் கூறுவதை, கட்சி கருத்தாக கூற முடியாது,'' என்றார்.

ஸ்டாலின் தவறான தகவலை கூறுகிறார்


பா.ஜ., மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மக்களை ஏமாற்ற, கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய, உயர் ஜாதியினருக்கு, யு.பி.எஸ்.சி., தேர்வில், அதிக சலுகை வழங்கப்பட்டுள்ளதாக, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். இது, முற்றிலும் கற்பனையான கடிதம். அரசியல் செய்வதற்காக, இந்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., தேர்வு முடிவுகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு, 909; பிற்படுத்தப்பட்டோருக்கு, 925 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் கூறியது, உண்மைக்கு மாறானது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு, 907; பிற்படுத்தப்பட்டோருக்கு, 735; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 706 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு, இடஒதுக்கீடு கொள்கையில் தலையிடவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் --

மூலக்கதை