அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு

* நீண்ட இழுபறிக்கு பிறகு பிடென் அறிவிப்பு* இந்தியர், கருப்பினத்தவர் ஓட்டுக்கு குறியா?வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட, தமிழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த கமலா ஹாரிசை பிடென் தேர்வு செய்துள்ளார். கடந்த 3 மாதங்களாக நீடித்து வந்த இழுபறிக்குப் பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், ஒபாமா ஆட்சியின் போது துணை அதிபராக பதவி வகித்த ஜோ பிடென் போட்டியிடுகிறார். இவர் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில், கடந்த 3 மாதங்களாக ஈடுபட்டு வந்தார். இதற்கு கடும் போட்டி நிலவி வந்தது. மேலும், தேர்தலில் பிடென் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால், துணை அதிபர் வேட்பாளர் தேர்வும் முக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஜோ பிெடன் நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில், `கமலா ஹாரிசை துணை அதிபர் பதவி வேட்பாளராக தேர்வு செய்துள்ளேன். உங்களுடன் இணைந்து டிரம்ப்பை வெற்றி கொள்வோம். கமலா ஹாரிஸ் துணிந்து போராடுபவர்; நாட்டின் மிகச் சிறந்த மக்கள் சேவகர்களில் ஒருவர்,’ என்று கூறியுள்ளார்.இதற்கு பதிலளித்து கமலா ஹாரிஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `தன் வாழ்நாளை நமக்காக போராடியவருடன் இணைந்து அமெரிக்க மக்களை ஒன்றிணைப்போம். அதிபராக நாம் நினைத்த அமெரிக்காவை அவர் கட்டி எழுப்புவார். அவருடன் இணைந்து துணை அதிபராக போட்டியிடுவது எனக்கு வழங்கப்பட்ட கவுரவமாகும். பிடென் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட என்னால் இயன்ற வரை உழைப்பேன்,’ என்று தெரிவித்துள்ளார். கமலா ஹாரிசின் தாயார் ஷியாமளா கோபாலன், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். மார்பக புற்றுநோய் விஞ்ஞானியாக பணியாற்றி யவர். தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்காவை சேர்ந்தவர். ஸ்டான்போர்டு பல்கலையில் பொருளாதார பேராசிரியராக பணியில் இருந்தார். கடந்த 60ம் ஆண்டுகளில் ஷியாமளா கோபாலன், அமெரிக்காவுக்கு சென்று குடியேறினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதால், அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜனநாயக கட்சியில் துணை அதிபர் வேட்பாளராக தேர்வாக, 12 பெண்கள் போட்டியிட்டனர். அவர்களில் இருந்து கமலாவை பிடென் தேர்வு செய்துள்ளார். முன்னதாக, கடந்தாண்டு டிசம்பரில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் பிடெனை எதிர்த்து கமலா கடுமையாக போட்டியிட்டு வந்தார். பின்னர், அவருக்கு ஆதரவு தெரிவித்து அந்த போட்டியில் இருந்து விலகி கொண்டார். மேலும், கமலாவை துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தீவிரமாக வலியுறுத்தி வந்தார். மேலும், கமலாவுக்கு அமெரிக்க வாழ் கருப்பினத்தவர், இந்திய வம்சாவளியினரிடம் சமீபகாலமாக மிகுந்த செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. கமலாவை தேர்வு செய்தால், இவர்களின் கணிசமான வாக்குகள் ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவற்றை எல்லாம் கணக்கு போட்டே, அவரை துணை அதிபர் வேட்பாளராக பிடென் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.* தென்னிந்திய வகை சாப்பாடும், சென்னையும் மிகவும் பிடிக்கும்: சித்தி, மாமா பரவசம்சென்னை, பெசன்ட் நகரில் உள்ள விஎச்எஸ் மருத்துவமனையில் கமலா ஹாரிசின் சித்தியான சரளா கோபாலன், டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கமலாவின் தாயார் சியாமளாவின் உடன் பிறந்த சகோதரி. இவர் அளித்த சிறப்பு பேட்டி வருமாறு: கமலாவுக்கு இப்படி ஒரு பெரிய வாய்ப்பு வரும் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது கூட நான் பேசினால், ‘சித்தி’ என்ற அவளின் பாசமான குரல்தான் வரும். அந்த அளவுக்கு என் மீதும், எனது சகோதரர் பாலச்சந்திரன் மீதும் அவளுக்கு அன்பு அதிகம். தனது தாயை போல் எந்த சவாலாக இருந்தாலும் கமலாவால் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். கமலாவின் தாய் சியாமளா காலமானவுடன், சென்னைக்கு வந்து தாயின் சாம்பலை வங்கக்கடலில் கரைத்தார். அந்த அளவுக்கு கமலாவுக்கு சென்னையும், தமிழ்நாடும் பிடிக்கும். சிறுமியாக இருந்த போது சென்னைக்கு பல முறை வந்திருக்கிறாள். எங்க அப்பாவுடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடந்து செல்வது அவளுக்கு மிகவும் பிடிக்கும். கோயில்களுக்கு செல்வதிலும் அதிக ஆர்வம் உண்டும். தென்னிந்திய உணவுகளை விரும்பி சாப்பிடக் கூடியவள். இப்போது, ஒரு கடினமான தேர்தலை சந்திக்க இருக்கிறாள். நிச்சயம் வெற்றி கிடைக்கும். எங்கள் குழந்தை இந்தளவு பிரபலமாக இருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். டெல்லியில் உள்ள ராணுவ கல்வி மற்றும் ஆய்வு மையத்தில் ஆலோசகராக பணியாற்றிவரும் கமலாவின் மாமா பாலச்சந்திரன் கூறும்போது, ‘‘கமலாவுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு எங்கள் குடும்பத்தையை பெருமை கொள்ள செய்துள்ளது,’’ என்றார்.* என்னை இயக்கும் அம்மாதுணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் கமலா ஹாரிஸ் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இது பற்றி தனது பிரசார இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், `சும்மா உட்கார்ந்து மற்றவர்களை பற்றி குறை கூறுவதை விட்டு விட்டு, உருப்படியாக ஏதாவது செய்’ என கூறும் எனது அம்மாவின் அறிவுரைகளே என்னை ஒவ்வொரு நாளும் இயக்கி வருகிறது,’ என்று கூறியுள்ளார்.* 13 லட்சம் இந்திய வம்சாவளியினர்அமெரிக்க தேர்தலில் 13 லட்சம் இந்திய வம்சாவளியினர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக, யுத்த களமாக கருதப்படும் பென்சில்வேனியாவில் 2 லட்சம், மிச்சிகனில் 1.25 லட்சம் இந்திய வம்சாவளியினர் உள்ளனர். இவர்களில் 77 சதவீதத்தினர் கடந்த 2016 அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தனர். இவர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கருப்பினத்தவரை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.* மதிக்காதவரை எப்படி தேர்வு செய்தார்கள்? டிரம்ப் ஆச்சர்யம் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளாராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு, குடியரசு கட்சியில் எதிர்ப்பு, வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் கூறுகையில், ``கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டது சிறிது அதிர்ச்சி அளிக்கிறது. ஏனெனில், அவர் ஜோ பிடெனுக்கு மரியாதை அளிக்காதவர். மரியாதை தெரியாத ஒருவரை ஏன் தெரிவு செய்தனர் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் அவர் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் 2 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில் அதிபர் தேர்வு பிரசாரத்தை அவர் முடித்து கொண்டார்,’’ என்றார். அதே நேரம், அரிசோனாவில் உரை நிகழ்த்திய துணை அதிபர் மைக் பென்ஸ், ``ஜோ பிடென் துணை அதிபர் வேட்பாளராக கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிசை தேர்வு செய்திருப்பதாக தற்போதுதான் கேள்விப்பட்டேன். அவர் இந்த போட்டியில் களம் இறங்குவதை வரவேற்கிறேன்,’’ என்றார்.* ஒபாமா வாழ்த்துகமலா ஹாரிஸ் தேர்வு குறித்து ஜனநாயக கட்சியை சேரந்தவரும், முன்னாள் முதல் கருப்பின அதிபருமான ஒபாமா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `பல ஆண்டுகளாக கமலா ஹாரிஸை நன்கு தெரியும். எந்தவொரு வேலைக்கும் தன்னை முழுவதுமாக தயார்படுத்தி கொள்பவர். அரசியலமைப்பை பாதுகாக்கவும், மக்களுக்காக துணிந்து போராடுவதிலும் தன் வாழ்நாளை அர்பணித்து கொண்டவர். அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது நாட்டுக்கு நல்லது. இவர்களை வெற்றி பெற செய்வோம்,’ என்று கூறியுள்ளார்.* வெள்ளை மாளிகை செல்லவில்லைஅமெரிக்காவில் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் 3வது பெண் என்ற பெருமையையும் கமலா பெறுகிறார். கடந்த 2008ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு சாரா பாலின் போட்டியிட்டார். 1984 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜெரால்டின் பெராரோ போட்டியிட்டார். ஆனால், 2 பேருமே வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு செல்லவில்லை. இந்த துரதிருஷ்டத்தை தகர்த்து விட்டு, இம்முறை முதல் பெண் துணை அதிபராக வெள்ளை மாளிக்கு கமலா ஹாரிஸ் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.* ஊக்கமளித்த தாத்தாகமலா ஹாரிஸ் சமீபத்தில்  டிவி.க்கு அளித்த பேட்டியில், ``பொதுச்சேவையில் எனது ஆர்வத்தை தூண்டுவதற்கு உதவியவர் எனது தாத்தா தான். திறமையான, அவர் மக்கள் சேவையில் ஆர்வம் கொண்டவர். வணங்குதலுக்குரியவர், துடிப்பானவர். ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் இருந்தாலும், கடிதங்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள என்னுடன் தொடர்பு கொண்டு, பொதுச்சேவையில் ஆர்வம் உள்ளவராக நான் வளர ஊக்கமளித்து வழிகாட்டியவர். 1998ம் ஆண்டு இறப்பதற்கு முன்பு வரை, தாத்தா என்னுடன் கடிதத் தொடர்பில் இருந்தார்,’’ என்றார் உருக்கமாக.

மூலக்கதை