கொரோனா வைரசை அழிக்க வந்துவிட்டது ‘ஸ்பட்னிக் வி’: ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசிக்கு ‘ஆர்டர்’ குவியுது...100 கோடி ‘டோஸ்’ கேட்டு 20 நாடுகள் முன்பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரசை அழிக்க வந்துவிட்டது ‘ஸ்பட்னிக் வி’: ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசிக்கு ‘ஆர்டர்’ குவியுது...100 கோடி ‘டோஸ்’ கேட்டு 20 நாடுகள் முன்பதிவு

மாஸ்கோ: கொரோனா வைரசை அழிக்க ‘ஸ்பட்னிக் வி’ என்ற தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை வாங்க 20 நாடுகள் 100 கோடி ‘டோஸ்’ கேட்டு ஆர்டர் கொடுத்துள்ளதாக  ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் அதிதீவிரமாக பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்காக தடுப்பூசி கண்டறியும் பணியில் பல நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்தப்படியாக கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள நாடுகளில் ரஷ்யா உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி  விட்டதாக ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனமும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகமும் இணைந்து தயாரித்துள்ளன.

தாங்கள் உருவாக்கிய மருந்திற்கு  ‘ஸ்பட்னிக் வி’ (Sputnik V) என்று ரஷ்யா பெயர் வைத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், ‘எனக்குத் தெரிந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளதோடு, அதனை பதிவும் செய்துள்ளது.

இதனை கண்டறியும் முயற்சியில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ரஷ்யாவில் இந்த தடுப்பூசியை யாருக்கும் வலுக்கட்டாயமாக செலுத்தப் போவதில்லை.

விருப்பம் உள்ளவர்கள் இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாம். எனது மகள் ஏற்கனவே இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

பலகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு இந்த தடுப்பூசி திறம்பட செயல்படுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றார். இந்த தடுப்பூசியை பெற இந்தியா உட்பட 20 நாடுகள் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

100 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளுக்கு ஆர்டர் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் கூறுகையில், ‘இதுவரை, 20 நாடுகள் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் (100 கோடி) டோஸ் அளவுகளை முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளன.தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் விரைவில் தொடங்கும். தடுப்பூசி உற்பத்தி செப்டம்பர் முதல் தொடங்கும்.

அக்டோபரில் பொதுமக்களுக்கு வழங்கப்படும். ரஷ்யா தனது ஆதரவு நட்பு நாடுகளுடன் சேர்ந்து ஆண்டுக்கு 500 மில்லியன் (50 கோடி) டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்ய உள்ளது’ என்றார்.

இருப்பினும், தடுப்பூசியின் செயல்திறன் குறித்து நிபுணர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்த தடுப்பூசி பாதுகாப்பானதா?, உலகத் தரத்தை பூர்த்தி செய்கிறதா? என்ற சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.

ஆனால், கொரோனா தடுப்பு மருந்துக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக ஒரு தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், தவறான பிரசாரங்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, எங்களுடன் இணைந்து, சம்பந்தப்பட்ட நாடுகள் தங்களின் குடிமக்களுக்கு, பாதுகாப்பான மற்றும் உயர் தரம் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்தை கொடுக்க முன்வர வேண்டும்.

இதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்றி, பெருந்தொற்றுக்கு ஒரு முடிவைக் கொண்டு வரலாம் என்று ரஷ்யா பரிந்துரை செய்துள்ளது.

.

மூலக்கதை