காஷ்மீரில் சோதனை அடிப்படையில் '4ஜி' சேவை: மத்திய அரசு தகவல்

தினமலர்  தினமலர்
காஷ்மீரில் சோதனை அடிப்படையில் 4ஜி சேவை: மத்திய அரசு தகவல்

புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீரில், இரண்டு மாவட்டங்களில், சோதனை அடிப்படையில், '4ஜி' இன்டர்நெட் சேவை வழங்கப்படும்' என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு ஆக., 5ல் நீக்கப்பட்டது. அதையடுத்து, மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

சாத்தியமில்லை


பாதுகாப்பு கருதி, அங்கு, இணையதள சேவை உட்பட பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டன. பல சேவைகள் மீண்டும் அமலுக்கு வந்தன. ஆனால், ஜம்மு - காஷ்மீரில் மட்டும், 4ஜி இன்டர்நெட் சேவைக்கான தடை தொடர்கிறது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'இணைய சேவை அளிப்பது தொடர்பாக, சிறப்பு குழுவை அமைத்து முடிவு செய்ய வேண்டும்' என, மே, 11ல் அளித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

ஆனால், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வில்லை' எனக் கூறி, மத்திய அரசு மற்றும் ஜம்மு - காஷ்மீர் நிர்வாகத்துக்கு எதிராக, அரசு சாரா அமைப்பு ஒன்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் என்.வி.ரமணா, சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. தற்போதும், ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்கிறது. அதனால், ஜம்மு - காஷ்மீர் முழுதும், '4ஜி' இன்டர்நெட் சேவையை அளிப்பதற்கு சாத்தியமில்லை.

சேவை வழங்கப்படும்


அதே நேரத்தில், சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் முடிந்த உடன், வரும், 15ம் தேதிக்குப் பின், ஜம்மு மற்றும் காஷ்மீர் மண்டலங்களில், தலா, ஒரு மாவட்டத்தில், சோதனை அடிப்படையில், இந்த சேவையை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆய்வு செய்யப்பட்டு, மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

எல்லை கட்டுப்பாடு கோட்டை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் பயங்கரவாதிகள் ஆபத்து உள்ள பகுதிகளில் இந்த சேவை அளிக்கப்படாது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளில் மட்டுமே இந்த சேவை வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். அதையடுத்து, மத்திய அரசு மற்றும் ஜம்மு - காஷ்மீர் நிர்வாகத்துக்கு எதிரான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துக் கொள்ளப்படுவதாக, அமர்வு கூறியது.

மூலக்கதை