உலகம் முழுவதும் 7.37 லட்சம் உயிர்களை காவு வாங்கிய கொரோனாவுக்கு தடுப்பூசி தயார்

தினகரன்  தினகரன்
உலகம் முழுவதும் 7.37 லட்சம் உயிர்களை காவு வாங்கிய கொரோனாவுக்கு தடுப்பூசி தயார்

* கண்டுபிடித்தது ரஷ்யா * சொந்த மகளுக்கே பரிசோதித்தார் அதிபர் புடின் * அக்டோபரில் பொதுமக்களுக்கு வழங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புமாஸ்கோ: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த தயாராகி விட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை தனது சொந்த மகளுக்கு போட்டு நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறி உள்ள அதிபர் விளாடிமிர் புடின், வரும் அக்டோபர் மாதம் முதல் நாட்டு மக்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுள்ளது. கடந்த எட்டு மாதத்தில் உலகில் 2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.37 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இனி தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பதை உலக நாடுகள் அறிந்து கொண்டுள்ளன. இதனால், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி உலகெங்கிலும் மிகத் தீவிரமாக நடக்கிறது.இதுவரை எந்த தடுப்பு மருந்தும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பு மருந்து மனிதர்களிடம் சோதிக்கும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த மருந்து தான் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயம், கொரோனா மருந்தை யார் முதலில் வெளியிடுவது என்பதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் போட்டியிட்டன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், ரஷ்யா தனது கொரோனா மருந்து வெளியிட தயாராகி விட்டதாக அதிரடியாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து, உலகின் முதல் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த தயாராகி விட்டதாகவும் அது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக, அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய அவர், ‘‘இந்த தடுப்பூசி முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பாதுகாப்பானது என நிரூபணமாகி உள்ளது. அனைத்து அவசியமான பரிசோதனைகளிலும் இந்த மருந்து வெற்றி அடைந்துள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நான் உறுதிப்படுத்திக் கொள்கிறேன். இந்த தடுப்பூசி பயன்படுத்துவது முழு பாதுகாப்பானது, அதிக செயல்திறன் கொண்டதும் கூட. இது உலகிற்கு மிக முக்கியமானது. எனது இரு மகள்களில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்த மருந்து கொடுத்து நல்ல பலன் கிடைத்துள் ளது’’ என்றார். ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள் ஜூன் 18ல் தொடங்கப்பட்டுள்ளன. 38 தன்னார்வலர்களுக்கு இந்த மருந்து செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் குழு ஜூலை 15ம் தேதியும் இரண்டாம் குழு ஜூலை 20ம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது நலமாக இருப்பதாக ரஷ்ய சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி முதலில் மருத்துவ பணியாளர்களுக்கும், ஆசியர்களுக்கும், அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் நபர்களுக்கும் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து செப்டம்பரில் அதிகப்படியான உற்பத்தியை தொடங்கி, அக்டோபரில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் என்றும் அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து இந்த மருந்தை பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் இனி பல்வேறு நாடுகளும் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.* அவசரகோலம் ஆபத்தாகிவிடும்ஏற்கனவே, கொரோனா மருந்தை வெளியிடுவதில் வல்லரசு நாடுகள் ஒவ்வொன்றும் நீயா, நானா போட்டியில் உள்ளன. இதில் ரஷ்யாவின் வேகத்தை பார்த்து மேற்கத்திய நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், ‘‘தடுப்பூசிக்கான பரிசோதனைகளை முடிக்க ரஷ்யா மிக குறுகிய காலமே எடுத்துக் கொண்டுள்ளது. 3ம் கட்ட பரிசோதனை முடிவதற்குள் இவ்வளவு அவசரப்பட்டால், அது ஆபத்தில் முடியும். தலைமையிடத்தில் இருப்பவர்களின் நெருக்கடியால், பல முக்கிய ஆய்வுகளை அவர்கள் புறக்கணித்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளன’’ என எச்சரித்துள்ளனர்.* இதுதான் பெயர்ரஷ்யா கண்டுபிடித்துள்ள மருந்துக்கு ‘ஸ்புட்னிக் வி’ (sputnik V) என பெயரிடப்பட்டுள்ளது. இது சோவியத் யூனியன் முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்பிய விண்கலத்தின் பெயராகும். இதற்கிடையே, உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், ‘‘எந்த கொரோனா மருந்துக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் வேண்டுமெனில், அது கடுமையான மதிப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்படும். ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். ரஷ்யாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் அளிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என குறிப்பிட்டுள்ளது.* புடின் மகளுக்கு எதிர்ப்புசக்திதனது மகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது குறித்து அதிபர் புடின் கூறுகையில், ‘‘என் மகளுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டதும் 38 டிகிரி செல்சியஸ் (100.4 பாரன்ஹீட்) காய்ச்சல் இருந்தது. பிறகு 37 டிகிரி ஆனது. அடுத்த நாள் 2வது ஊசி போடப்பட்ட பிறகு உடலின் வெப்பம் சீரானது. அவ்வளவுதான். அவர் நல்ல தெம்பாகி விட்டார். உடலில் ஆன்டிபாடிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது’‘ என்றார்.

மூலக்கதை