ஜவுளித்துறையின் தேவை நிறைவேறும்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

தினமலர்  தினமலர்
ஜவுளித்துறையின் தேவை நிறைவேறும்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

திருப்பூர்:'ஜவுளித்துறையினருக்கு தேவையான உதவிகளை செய்துதர, மத்திய அரசு தயாராக உள்ளது,'' என, குறு, சிறு நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், பாதுகாப்பு ஆடை தயாரிப்பு குறித்த இரண்டுநாள் ஆன்லைன் கருத்தரங்கம், நேற்று துவங்கியது.
கருத்தரங்கை துவக்கி வைத்து, மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:முழுகவச ஆடை ஏற்றுமதிக்கு அனுமதிப்பதால், நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும்; அன்னிய செலாவணி வருகையும் அதிகரிக்கும். எனவே, முழுகவச ஆடை ஏற்றுமதிக்கு தடையை விலக்கவேண்டுமென, பிரதமர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.
ஜவுளித் துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர, அரசு தயாராக உள்ளது. பொருளாதாரம், கல்வி ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு உதவ, 115 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து, தேவையான உதவி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் பேசுகையில், ''முகக் கவச ஆடை ஏற்றுமதியில், மாதம் 50 லட்சம் ஆடை என்கிற வரையறை நீக்கப்படவேண்டும். 'என்-95' முகக் கவசத்துக்கான தடையை நீக்க வேண்டும்.செயற்கை இழை ஆடை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைக்க, 25 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.
100 கோடி ரூபாய் வரை கடன் நிலுவை உள்ள நிறுவனங்களுக்கு, ஏற்றுமதியை கணக்கிடாமலும், அவசர கால கடன் வழங்கும்வகையில், வரையறையை திருத்த வேண்டும்,'' என்றார்.திருப்பூர், கோவை உட்பட நாடு முழுவதும் உள்ள ஜவுளித்துறையினர் பங்கேற்றனர்.

மூலக்கதை