எங்ககிட்ட வேலை இருக்கு வாங்க! அழைக்கின்றன அன்னூர் நிறுவனங்கள்

தினமலர்  தினமலர்
எங்ககிட்ட வேலை இருக்கு வாங்க! அழைக்கின்றன அன்னூர் நிறுவனங்கள்

அன்னூர்:அன்னுாரில் நுாற் பாலை, பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன. தாலுகா முழுவதும், பல நிறுவனங்கள் 'வேலைக்கு ஆட்கள் தேவை' என அழைப்பு விடுத்துள்ளன.
அன்னூர் தாலுகாவில், நூற்பாலை, ஜின்னிங் பேக்டரி, பின்னலாடை நிறுவனம், விசைத்தறி, பவுண்டரி, இன்ஜினியரிங் தொழிற்சாலை என, பல நிறுவனங்கள் உள்ளன.இவற்றில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். ஊரடங்கு காரணமாக, கடந்த ஏப்ரல், மே மாதங்களில், 5,500 தொழிலாளர்கள் அன்னூர் தாலுகாவில் இருந்து, பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு திரும்பி சென்றனர்.
இவர்கள் சிறுக, சிறுக வரத்துவங்கியுள்ளனர்.இவர்களுடன், உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்களின் உதவியுடன், கடந்த ஒரு மாதமாக, நூற்பாலை, பின்னலாடை நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. வரிசையாக தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை ஆர்டர்கள் மெள்ள வரத்துவங்கி இருப்பதால், தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகள், 'ஆட்கள் தேவை' என்னும் விளம்பரங்களை அன்னூர், கரியாம்பாளையம், கணேசபுரம் உள்ளிட்ட ஊர்களில், மக்கள் கூடுகின்ற இடங்களில், போஸ்டர்களாக அச்சடித்து ஒட்டியுள்ளனர்.தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வந்து, சேர்த்து விடுவோருக்கு கமிஷன் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளன. இதனால் அன்னூர் பகுதியில் தொழிலாளர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.தொழிலாளர் பற்றாக்குறை இருந்தாலும், தொழில் நிறுவனங்கள் மீண்டும் முழுமையாக செயல்படத் துவங்கியது, தொழில் துறையினரையும், அது சார்ந்த துறையினரையும், மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

மூலக்கதை