கொரோனாவுக்கு முதல் தடுப்பூசி ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
கொரோனாவுக்கு முதல் தடுப்பூசி ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

மாஸ்கோ; கொரோனா வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கிஉள்ளதாக அந்த நாட்டின் அதிபர், விளாதிமீர் புடின் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதத்தில் இருந்து இது சந்தைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்தாண்டு, டிசம்பரில், நம் அண்டை நாடான சீனாவில் பரவத் துவங்கிய, கொரோனா வைரஸ் பாதிப்பு, உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. முதல் தடுப்பூசிஇதுவரை, இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில், இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக, ரஷ்ய அதிபர், விளாதிமீர் புடின் கூறியுள்ளார்.அரசு அதிகாரிகள் இடையே நடந்த கூட்டத்தின் போது, இதை அவர் அறிவித்துள்ளார். இது குறித்து, ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தக் கூட்டத்தின் போது, புடின் கூறியதாவது:கொரோனாவுக்கு எதிரான போரில், நாம் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளோம். இந்த வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசியை நாம் உருவாக்கியுள்ளோம். என்னுடைய ஒரு மகளுக்கும், இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டு கட்டங்களாக இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தியதும், அவருடைய உடல் வெப்பநிலை சற்று உயர்ந்து, பின் இயல்பு நிலைக்கு வந்தது. தற்போது அவர் சிறந்த உடல் நலத்துடன் உள்ளார்.

இந்த தடுப்பூசி சிறப்பாக செயலாற்றுகிறது. மேலும், நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.இந்த தடுப்பூசி தயாரிப்பில் உதவிய அனைவருக்கும் பாராட்டு களும், நன்றியும். இதுபோன்று தடுப்பூசி தயாரிக்க, பல நாடுகளும் முயன்று வருகின்றன. அவையும் வெற்றி பெற்று, உலகெங்கும், இந்த வைரசுக்கு எதிராக பல தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, ரஷ்ய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கேமாலியா ஆராய்ச்சி மையம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. தடுப்பூசியை தயாரிக்க மற்றும் உலகெங்கும் சந்தைப்படுத்துவதற்காக, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கேமாலியா ஆராய்ச்சி மையம் மற்றும் பின்னோபார்ம் நிறுவனம் ஆகியவை, இந்த தடுப்பூசியை தயாரிக்க உள்ளன. இவ்வாறு, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

20 நாடுகள், 'புக்கிங்'

இந்த நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் திட்டத்துக்கு நிதிஉதவி அளிக்கும், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர், கிரில் திமித்ரியேவ், கூறியதாவது:இந்த தடுப்பூசிக்கு, 'ஸ்புட்னிக் வி' என்று பெயரிட்டுள்ளோம். நாட்டின் முதல் விண்கலத்தை நினைவுகூரும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பெறுவதற்காக, 20 நாடுகள் முன்பதிவு செய்துள்ளன. அவை, 100 கோடி மருந்துகள் கேட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை