இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

தினமலர்  தினமலர்
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் துவங்கியுள்ளது.இந்தோனேசியா சுமத்ரா தீவில் 260 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். தீவின் இருபுறமும் பசிபிக் நெருப்பு வளையம் உள்ளதால் இங்கு பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு, எந்நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 120 எரிமலைகள் உள்ளன.


இந்நிலையில் இன்று தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் துவங்கியுள்ளது; 16,400 அடி உயரத்திற்கு சாம்பல் துகள்கள் பறந்தன. இதனால் 5 கி.மீ., தொலைவுவரை உள்ள சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களில் மட்டும் எரிமலை வெடிப்பால், 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இப்பகுதியிலிருந்து வெளியேறி உள்ளனர்.


வெடிக்கும் எரிமலைகள்


இந்தோனேசியாவின் சும்பாவா தீவிலுள்ள மவுண்ட் தம்போரா எரிமலை, 1815ம் ஆண்டு வெடித்ததில் 12,000 பேர் பலியாகினர். மேலும் இதனால் ஏற்பட்ட பஞ்சத்தில் 80,000 பேர் உயிரிழந்தனர்.
* கிரகட்டோவா தீவு, எரிமலை வெடிப்பால் 1883ம் ஆண்டு வரைபடத்திலிருந்தே அழிக்கப்பட்டது. மேலும் இதில் 36,000 பேர் உயிரிழந்தனர். 1928ம் ஆண்டு மீண்டும் அதே பகுதியில் புதிய எரிமலை உருவாகியது.
* மவுண்ட் கெலுட் எரிமலை 1568ம் ஆண்டு வெடித்தது. இதில் 10,000 பேர் கொல்லப்பட்டனர். 1919ம் ஆண்டு இந்த எரிமலை மீண்டும் வெடித்ததில் 5,000 பேர் உயிரிழந்தனர்.


* உலகின் மிகவும் ஆபத்தான எரிமலையாகக் கருதப்படும் மெராபி 1930ம் ஆண்டு வெடித்துச் சிதறியதில் 1,300 பேர் உயிரிழந்தனர். 2010ம் ஆண்டு மெராபி மீண்டும் வெடித்ததில், 300 பேர் உயிரிழந்தனர்.

* சுமத்ரா தீவிலுள்ள சினாபங்க் எரிமலை 2014ம் ஆண்டு வெடித்துச் சிதறியதில் 16 பேர் பலியாகினர். 2016ம் ஆண்டு மீண்டும் வெடித்ததில் 7 பேர் பலியாகினர்.
* பாலி தீவிலுள்ள மவுண்ட் அகுங் எரிமலை 1963ம் ஆண்டு வெடித்தபோது 1,600 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது அகுங் எரிமலை மீண்டும் வெடிக்கத் துவங்கியுள்ளது.

மூலக்கதை