கிறிஸ் வோக்ஸ் முன்னேற்றம்: ஐ.சி.சி., தரவரிசையில் | ஆகஸ்ட் 09, 2020

தினமலர்  தினமலர்
கிறிஸ் வோக்ஸ் முன்னேற்றம்: ஐ.சி.சி., தரவரிசையில் | ஆகஸ்ட் 09, 2020

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் 7வது இடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ், 273 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறினார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் 84 ரன் விளாசிய இவர், இரு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.

முதல் மூன்று இடங்களை ஸ்டோக்ஸ் (464 புள்ளி, இங்கிலாந்து), ஹோல்டர் (447, விண்டீஸ்), ரவிந்திர ஜடேஜா (397, இந்தியா) தக்கவைத்துக் கொண்டனர்.

ஸ்டோக்ஸ் பின்னடைவு: பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தன் பென் ஸ்டோக்ஸ், 775 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஏமாற்றியதால் (0, 9 ரன்) இவர், பின்னடைவை சந்தித்தார். இரண்டாவது இன்னிங்சில் 75 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் (589 புள்ளி), 30வது இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்து துவக்க வீரர் ரோரி பர்ன்ஸ், 17வது இடத்தில் இருந்து 23வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 156 ரன்கள் விளாசிய பாகிஸ்தானின் ஷான் மசூது (653 புள்ளி), 19வது இடத்துக்கு முன்னேறினார்.

முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (911 புள்ளி), இந்தியாவின் விராத் கோஹ்லி (886), ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசேன் (827) நீடிக்கின்றனர்.

பவுலர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் முகமது அபாஸ் (769 புள்ளி), 10வது இடத்தை ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் உடன் பகிர்ந்து கொண்டார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (836), இந்தியாவின் பும்ரா (779) முறையே 3வது, 8வது இடத்தில் தொடர்கின்றனர்.

 

மூலக்கதை