பணி! தற்காலிக ஆசிரியர்கள் 805 பேர்...பள்ளி கல்வித்துறை அதிரடி திட்டம்

தினமலர்  தினமலர்
பணி! தற்காலிக ஆசிரியர்கள் 805 பேர்...பள்ளி கல்வித்துறை அதிரடி திட்டம்

புதுச்சேரி, : அரசு பள்ளிகளில் பணியாற்றும் 805 ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளி கல்வித் துறையில் 7,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள், மூன்றாண்டு பணியாற்றிய பிறகு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலமும் உள்ளடக்கம்.ஆனால், நடைமுறையில் ஆசிரியர்கள் பல ஆண்டு களாக பணியில் தொடர்ந்தாலும் நிரந்தரம் செய்வதில்லை. தற்காலிக பணியிடத்திலேயே வைக்கப்படுகின்றனர். இது ஆசிரியர்கள் மத்தியில் விரக்தியையும், சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் 805 தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக அரசு பள்ளிகளுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

அதில், பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக பணியிடங்கள், அதில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. எத்தனை காலியாக உள்ளது. மேலும், தற்காலிக பணியிடங்கள் அடாக் அல்லது ரெகுலர் அல்லது ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டதா என்ற தகவலை வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.கெடு முடிய சில நாட்களே உள்ளதால் அனைத்து பள்ளிகளும் தற்காலிக பதவியில் உள்ள ஆசிரியர்கள் பற்றிய தகவல் சேகரிப்பில் சுறுசுறுப்பாக இறங்கியுள்ளன.துணை முதல்வர், பள்ளி தலைமையாசிரியர் கிரேடு-1 உள்ளிட்ட குரூப் 'ஏ' பணியில் 20 தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர்.

விரிவுரையாளர்கள், கணினி பயிற்றுநர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளி நுாலகர், உடற்கல்வி ஆசிரியர், நுண்கலை ஆசிரியர் உள்ளிட்ட குரூப் 'பி' பணியிடங்களில் 489 தற்காலிக ஆசிரியர்களும், யு.டி.சி, ஜவகர் பால்பவன், டெலிபோன் ஆபரேட்டர், பல்நோக்கு ஊழியர்கள் உள்ளிட்ட குரூப் 'சி' பதவியில் 296 தற்காலிக ஆசிரியர்கள் தற்போது பணியில் உள்ளனர்.பணி நிரந்தர நடவடிக்கை பள்ளி கல்வித் துறை துரிதப்படுத்தி வருவது தற்காலிக பணியில் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை