'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

தினமலர்  தினமலர்
நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

சென்னை : சென்னை விமான நிலையத்தில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி.,யிடம், 'நீங்கள் இந்தியரா' என கேட்ட, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான லோக்சபா நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று மதியம், 1:50 மணி விமானத்தில், கனிமொழி டில்லி சென்றார். அப்போது, விமான நிலையத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், ஹிந்தியில் பேசினார்.

அதற்கு கனிமொழி, 'எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்' என, கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி, 'நீங்கள் இந்தியர் தானா?' என, கேட்டுள்ளார்.

இதுகுறித்து, கனிமொழி, 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: விமான நிலையத்தில், சி.ஐ.எஸ்.எப்., அதிகாரியிடம், எனக்கு ஹிந்தி தெரியாததால் தான், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டேன். அதற்கு அவர், 'நீங்கள் இந்தியரா' என, என்னை பார்த்து கேட்கிறார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை, எப்போது உருவானது என்பதை, நான் அறிய விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

கனிமொழியின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்தும், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் எம்.பி.,க்கள் மாணிக் தாகூர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர், கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சி.ஐ.எஸ்.எப்., தரப்பில், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியான பதிவில், 'விரும்பத்தகாத இந்த சம்பவம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எந்த அதிகாரியிடமும், ஹிந்தியில் தான் பேச வேண்டும் என, எந்த உத்தரவும், எங்கள் தரப்பில் பிறப்பிக்கப்படவில்லை' என, கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை