வீட்டில் உள்ள கொரோனா நோயாளிகளுக்காக அறிமுகமாகுது 'கோவிட் ஹோம் கேர்' திட்டம்

தினமலர்  தினமலர்
வீட்டில் உள்ள கொரோனா நோயாளிகளுக்காக அறிமுகமாகுது கோவிட் ஹோம் கேர் திட்டம்

சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளிலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களுக்காக, 'அம்மா கோவிட் ஹோம் கேர்' என்ற, சுகாதார திட்டம் துவக்கப்பட உள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா தொற்று தீவிரமாக உள்ளது. மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறையை தவிர்க்க, குறைந்த பாதிப்பு மற்றும் அறிகுறிகள் உடைய நோயாளிகள், 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். சென்னையில் மட்டும், 5,000க்கும் மேற்பட்டோர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். அவர்களது உடல்நிலையை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர்.

இவ்வாறு வீட்டு கண்காணிப்பில் உள்ள நோயாளிகளுக்காக, 'அம்மா கோவிட் ஹோம் கேர்' என்ற திட்டத்தை, அரசு செயல்படுத்த உள்ளது.இத்திட்டத்தில், 2,500 ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை கருவிகள், மருந்து, மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படும்.அதில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதய துடிப்பை கண்டறிவதற்கான பல்ஸ் ஆக்ஸி மீட்டர், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தெர்மல் மீட்டர் போன்ற உபகரணங்கள் இருக்கும்.

அத்துடன், 14 நாட்களுக்கு தேவையான விட்டமின் - சி, டி; ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடி ஆகியவை இருக்கும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அதிமதுர பொடி, உடல் வலிமைக்கான அமுக்ரா சூரண மாத்திரைகள், 14 முக கவசங்கள், சோப்பு உள்ளிட்டவையும் வழங்கப்படும்.

இதைதவிர, முழு உடல் பரிசோதனை மைய அலுவலர்கள், வீடியோ அழைப்பு வாயிலாக உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளனர்.அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம், சென்னையில் துவக்கப்பட உள்ளது. ஓரிரு நாட்களில், இந்த திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைப்பார் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை