ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய குடியிருப்பு திட்டம்?

தினமலர்  தினமலர்
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய குடியிருப்பு திட்டம்?

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, அகில இந்திய பணி அதிகாரிகளுக்கு, மீண்டும் புதிய குடியிருப்பு கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

தமிழக அரசு நிர்வாகத்தில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பிரிவுகளில், உயர் அதிகாரிகள் இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இதற்காக, 2011ல், சென்னையில், கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில், 17 ஏக்கர் நிலத்தில், 1,016 வீடுகள் அடங்கிய குடியிருப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. சுயநிதி முறையிலான இத்திட்டத்தில், அதிகாரிகளுக்கு, 608 வீடுகள் ஒதுக்கப்பட்டன.

வீட்டுவசதி வாரிய திட்டங்களில் ஏற்கனவே வீடுகள் பெற்றவர்கள், இதில், மீண்டும் வீடு ஒதுக்கீடு பெற்றது சர்ச்சையானது. இதனால், 30 அதிகாரிகளின் வீடுகள் திரும்ப பெறப்பட்டன. அதுமட்டுமின்றி, நெற்குன்றம் திட்டத்தில், வீடு ஒதுக்கீடு பெற்றவர்களில் பலர், கூடுதல் விலைக்கு வீட்டை விற்றும் விட்டனர்.

இந்நிலையில், 2011க்கு பின், புதிதாக தமிழக பணிக்கு வந்த அதிகாரிகளுக்கு, சொந்த வீடு வழங்க வேண்டும் என, துணை முதல்வரிடம், சில சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்த மனுக்கள், வீட்டுவசதி துறை வாயிலாக, வீட்டுவசதி வாரியத்துக்கு வந்துள்ளன.

இது குறித்து, வாரிய அதிகாரிகள் கூறியதாவது: நெற்குன்றம் திட்டம் முடிந்த நிலையில், நீதித்துறை அலுவலர் குடியிருப்பு திட்டம் உருவாக்க கோரிக்கை வந்தது. தற்போது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சொந்த வீடு கோரிக்கை வந்துள்ளது.தற்போதைய சூழலில்,இதற்கான திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமா என்று, ஆராய்ந்து வருகிறோம். விரைவில், இதில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

மூலக்கதை