'உண்மையின் பக்கம் நில்லுங்க': எம்.எல்.ஏ.,க்களுக்கு கெலாட் கடிதம்

தினமலர்  தினமலர்
உண்மையின் பக்கம் நில்லுங்க: எம்.எல்.ஏ.,க்களுக்கு கெலாட் கடிதம்

ஜெய்ப்பூர்; 'ஜனநாயகத்தை காப்பாற்ற, மக்களின் குரலை கேட்டு, உண்மையின் பக்கம் நிற்க வேண்டும்' என எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கெலாட்டுக்கு எதிராக, துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். இதையடுத்து, கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஜெய்சால்மரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், ஹரியானா மாநிலம், மானேசரில் தங்கியுள்ளனர். ராஜஸ்தான் சட்டசபை கூட்டம், வரும், 14ல் துவங்குகிறது. இந்த கூட்டத்தில், அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க, அசோக் கெலாட் முடிவு செய்துள்ளார். இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபையின், 200 எம்.எல்.ஏ.,க்களுக்கும், முதல்வர் அசோக் கெலாட் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.

மூன்று பக்கங்கள் உடைய இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ராஜஸ்தான் மக்கள், காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து, 2018ல் ஓட்டளித்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. மக்களின் நம்பிக்கையையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றும் பொறுப்பு, நமக்கு உள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக, ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடக் கூடாது.

நீங்கள் எந்த கட்சியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,வாகவும் இருக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மாநில வளர்ச்சிக்காக எப்படி பாடுபட்டு வருகிறது என்பது பற்றி, மக்களின் கருத்தை கேட்டு, அதற்கேற்ப நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். மக்கள் மற்றும் மாநிலத்தின் நலன் கருதி, மக்களின் குரலுக்கு மதிப்பளித்து, ஜனநாயகத்தை காப்பாற்ற, உண்மையின் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும்; நிற்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கொரோனா பரவலை எதிர்த்து நாம் போராடி வருகிறோம். மக்களின் உயிர்களை பாதுகாக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், மாநில அரசு, இரவு பகலாக பாடுபட்டு வருகிறது. இந்த நேரத்தில், நம் கட்சியை சேர்ந்த சிலரும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் இணைந்து, ஆட்சிக்கு எதிரான சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.

ஜனநாயகத்தில் வெற்றியும், தோல்வியும் சகஜம். மக்களின் தீர்ப்பு தான் முக்கியம். முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ், வாஜ்பாய் ஆகியோரும் தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளனர். ஆனால், ஜனநாயகத்தை பலவீனப்படுத்த, அவர்கள் ஒரு போதும் முயற்சித்ததில்லை. அதனால், மக்களின் குரலுக்கு மதிப்பளித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து செயல்பட ஆதரவு தர வேண்டும். இவ்வாறு, அந்த கடிதத்தில் கெலாட் கூறியுள்ளார்.

பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்


ராஜஸ்தான் சட்டசபை, 14ல் கூட உள்ள நிலையில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சியான, ராஷ்ட்ரீய லோக்தந்த்ரிக் கட்சி ஆகியவற்றின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், ஜெய்ப்பூரில் நாளை நடக்கிறது. இதில், மாநில அரசியல் நிலவரம் பற்றியும், சட்டசபை கூட்டத் தொடர் பற்றியும் ஆலோசிக்கப்படும் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், காங்கிரசில் சேர்ந்த, பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி தொடர்ந்த வழக்கில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், நாளை தீர்ப்பளிக்க உள்ளது. இதற்கிடையில், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை போலீசாரை பயன்படுத்தி, மாநில அரசு துன்புறுத்துவதாக, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து, குஜராத்துக்கு, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் சென்றுள்ளனர்.

மூலக்கதை