கைகொடுக்கிறது! கடலூரில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம்....முழுமையான சிகிச்சை மையங்கள் தேவை

தினமலர்  தினமலர்
கைகொடுக்கிறது! கடலூரில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம்....முழுமையான சிகிச்சை மையங்கள் தேவை

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், சித்த மருத்துவ சிகிச்சை மூலம் உயிரிழப்பு ஏதுமின்றி, ஓரிரண்டு வாரத்தில் 300 பேர் குணமடைந்துள்ளதால், சித்தா, ஆயுஷ் கூட்டு சிகிச்சையளிக்க, முழுமையான சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாரம்பரிய சித்த மருத்துவம், கொரோனாவிற்கு எதிராக நல்ல பலன் அளித்துள்ளதை தொடர்ந்து, கொரோனாவுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க தமிழக அரசு அங்கீகாரம் அளித்து, கொரோனா மருத்துவமனைகளிலும், அலோபதியுடன், சித்த மருத்துவமும் வழங்கப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், கடலுார், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 10 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்படும் நிலையில், அங்கு சிகிச்சைக்கு சேர்க்கும் போதே சித்தா மருந்துகள் மொத்தமாக வழங்கப்படுகிறது.

மேலும், கடலுார் அருகே தனியார் பொறியியல் கல்லுாரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் துவக்கப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருந்துவ சிகிச்சை மட்டுமே ஒரு மாதமாக அளிக்கப்படுகிறது.சித்த மருத்துவ டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதால், அங்கு அலோபதி டாக்டர்களும் அவசர தேவைக்காக பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சித்த மருத்துவம் சார்ந்த உணவு வழங்காமல், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உணவே வழங்கப்படுகிறது.கடந்த மாதம் 10ம் தேதி முதல் இம்மையம் செயல்படும் நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 500 பேர் சிகிச்சைக்கு சேர்ந்து, நேற்று வரை 300 பேர் பூரண குணமடைந்தனர்.

மாவட்டத்தில் கொரோ னாவால் 4,633 பேர் பாதித்து 60 பேர் இறந்துள்ளனர். ஆனால், சித்த மருத்துவத்தில் 500 பேர் சேர்ந்து உயிரிழப்பு ஏதும் இல்லை என, சித்தா சிகிச்சை மீது மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி ராஜகுமரன் கூறுகையில், கடலுாரில் சித்த மருத்துவ மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அமுக்ரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், பிரம்மானந்த பைரவம் மற்றும் காலை, மாலை இரு வேளையிலும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.

இஞ்சி, மஞ்சள், கிராம்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி, பொதினா உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்ட மூலிகை தேநீர் இரு வேளையும் வழங்கப்படுகிறது.மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா மருந்து மொத்தமாக வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 49 சித்தா, ஓமியோபதி சிகிச்சை மையங்களில் பணி புரியும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் சித்தா பிரிவில் 40 டாக்டர்கள் உள்ளனர். யோகா, ஓமியோபதி உள்ளிட்ட பிரிவுகளில் கூடுதல் டாக்டர்கள், ஊழியர்கள் நியமித்தால் கொரோனா சிகிச்சையை மேலும் மேம்படுத்த முடியும்.

மாவட்ட அமைச்சர் மற்றும் கலெக்டரின் முயற்சியால் சித்த மருத்துவம் மட்டுமே கொடுத்து சிகிச்சை மையம் ஒன்று அமைக்கப்பட்டது. கூடுதல் டாக்டர்கள் நியமித்தால் முழுமையான சித்தா சிகிச்சை மையமாக செயல்பட உதவியாக இருக்கும். சித்தா, ஆயுர்வேத, யோகா உள்ளிட்ட சிகிச்சை மூலம் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் கொரோனா பாதித்தவர்களை ஒரு வாரத்தில் குணப்படுத்த முடியும். நோயாளிகளும் விரைவில் வீடு திரும்புவர். அரசின் சுமையும் குறையும்' என்றார்.கடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முழுமையான சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

'கொரோனாவை விரட்டஆவி பிடியுங்கள்'கொரோனாவை விரட்ட டாக்டர் ராஜகுமரன் அட்வைஸ்: தினமும் மூன்று வேளையும் வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு, மஞ்சள் கலந்து வாய் கொப்பள்ளிக்க வேண்டும். வெளியில் சென்று வீடு திரும்பியதும் கொதிக்க வைத்த தண்ணீரில் மஞ்சள், கல் உப்பு போட்டு ஆவி பிடிக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு, வாயால் சுவாசித்து மூக்கு வழியாக காற்றை வெளியேற்ற வேண்டும். மூக்கு வழியாக ஆவியை இழுத்து வாயால் வெளியேற்ற வேண்டும்.

அப்படி செய்தால் மூக்கில் இருந்து நுரையீரல் வரையில் கொரோனாவை உண்டாக்கும் கிருமிகள் அழிந்து விடும்.  கபசுர குடிநீர் தொடர்ந்து குடிக்க வேண்டும். யோகா, மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் மூச்சுத்திணறல் வராமல் தடுக்க முடியும்.

மூலக்கதை