தரமில்லா பள்ளிகளால் பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை தனி டியூஷனுக்கு மட்டும் ரூ.25,000 கோடி செலவு: பட்ஜெட்டில் 3ல் ஒரு பங்கு சர்வேயில் அதிர்ச்சி தகவல்

தினகரன்  தினகரன்
தரமில்லா பள்ளிகளால் பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை தனி டியூஷனுக்கு மட்டும் ரூ.25,000 கோடி செலவு: பட்ஜெட்டில் 3ல் ஒரு பங்கு சர்வேயில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: பள்ளிகளின் தரம் சரியில்லை; படிப்பை சரியாக சொல்லி தருவதில்லை என்பதால் சராசரி இந்திய குடும்பங்கள், தங்களின் பிள்ளைகள் படிப்புக்கு தனியாக டியூஷன் வைப்பது அதிகரித்துள்ளது. இதற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.25,000 கோடியை செலவு செய்கின்றனர். மத்திய அரசின் கல்வித்துறை மற்றும் தேசிய புள்ளியியல் அமைப்பு எடுத்த கணக்கெடுப்பில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசு பள்ளி கல்விக்காக ஆண்டுதோறும் ரூ.60 ஆயிரம் கோடியை ஒதுக்குகிறது. அதில், மூன்றில் ஒரு பங்கை இந்திய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக தனியார் டியூஷனுக்காக செலவழிக்கின்றனர் என்பது வேதனையான ஒன்று என கல்வியாளர்கள் கூறுகின்றனர். சர்வேயில் வெளியான சில முக்கிய தகவல்கள்:* இந்தியா முழுவதும் எல்கேஜி முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர் தனியாக டியூஷன் வைக்க வேண்டியிருக்கிறது. * ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஒவ்வொரு குடும்பமும் தனியார் டியூஷன் வைக்கின்றன. இதன் மூலம், நாட்டில் மொத்தமாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.* ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் ரூ.5,400 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கிறது.* இப்படி கணக்கிட்டால், பல்வேறு வகை பள்ளிகளில் மொத்தம் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஆண்டுக்கு மொத்தமாக ரூ.24,880 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது.* இது, நாட்டில் கல்வி துறைக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். * மேல்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு தனி டியூஷனுக்கு மட்டும் அவனது பெற்றோர் மாதம் ரூ.2,500 செலவு செய்கின்றனர். * 6 முதல் 9ம் வகுப்பு வரை தலா ஒரு மாணவருக்கு 1,632 ரூபாய் அளவுக்கு பெற்றோருக்கு செலவு ஏறுகிறது.* 1 முதல் 5ம் வகுப்பு வரை தலா மாதம் 900 ரூபாய் டியூஷனுக்கு மட்டும் செலவாகிறது.* எல்கேஜிக்கு கூட மாதம் டியூஷனுக்கு பெற்றோர் தலா ரூ.300 செலவழிக்க வேண்டியிருக்கிறது.* இப்படி எல்லா வகுப்பு காலங்களிலும் பெற்றோர், தங்களின் பிள்ளைகளுக்காக டியூஷன் செலவை ஏதாவது ஒரு வகையில் ஏற்க வேண்டியிருக்கிறது. * இந்த தொகை தனியாக டியூஷன் வைப்பதற்கு மட்டும்தான். பள்ளி கட்டணங்கள் தனி.  அதையும் பெற்றோர்கள் பல மடங்கு ஏற்க வேண்டியிருக்கிறது. மொத்த கல்வி செலவில், 13 சதவீதத்தை பெற்றோர்கள் பிள்ளைகளின் டியூஷனுக்காக கொடுக்கின்றனர். * பள்ளி கட்டணத்தில் கல்விக் கட்டணம் போக, திடீரென வரும் செலவுகளும் உண்டு. புத்தகங்களுக்காக மட்டும் 20 சதவீத செலவுகள் பெற்றோர் தலையில் விழுகிறது. இப்படி கணக்கிட்டால், நாட்டில் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர் செய்யும் மொத்த செலவுகள் ஆண்டுக்கு ரூ.1.9 லட்சம் கோடி அளவுக்கு போகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாநில அரசுகள் பள்ளி கல்வித் துறைக்கு செலவிடுவதில், எந்த சதவீத அளவுக்கு பெற்றோர்கள் தனி டியூஷனுக்காக செலவிடுகின்றனர் என்பதை கீழே பாருங்கள். இதில், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் குறைந்தபட்ச செலவுதான் ஆகிறது. சில மாநிலங்களில் மிக அதிக செலவை பெற்றோர் செய்ய வேண்டியிருக்கிறது.

மூலக்கதை