சிறிய ரக பீரங்கிகள், சரக்கு விமானங்கள் உட்பட 101 ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சிறிய ரக பீரங்கிகள், சரக்கு விமானங்கள் உட்பட 101 ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: சிறிய ரக பீரங்கிகள், சரக்கு விமானங்கள் உட்பட 101 வகையான நவீன ராணுவ தளவாடங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, இந்தியா தற்சார்பு பொருளாதார நிலையை அடைய வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இதற்கான தற்சார்பு திட்டம் ராணுவத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் தற்சார்பு நிலையை அடைய ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 101 வகையான ராணுவ தளவாடங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான முக்கிய அறிவிப்பினை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார். அவர் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க பெரிய முன்னெடுப்பை செய்ய தயாராகி உள்ளோம். இதன்படி, 101 ராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு தடை விதித்து, அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தளவாடங்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்படும் 101 தளவாடங்களும் சாதாரணமானவை அல்ல. அதில், சிறிய ரக பீரங்கிகள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், சோனார் அமைப்புகள், இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், சரக்கு விமானம், எல்சிஎச் ரேடார்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல் ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன பல ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த தடையை 2024க்குள் முழுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பலன் அடையும். உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படும்.நாட்டின் பாதுகாப்பில் தற்சார்பு நிலையை எட்ட இது ஒரு பெரிய படியாகும். ராணுவம், தளவாட உற்பத்தி நிறுவனங்கள், தனியார் என அனைத்து தரப்பின் கருத்தையும் கேட்டறிந்த பிறகே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் உள்நாட்டிலிருந்து தளவாடங்கள் கொள்முதல் செய்ய ரூ.52,000 கோடி தனி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் தற்போதுவரை முப்படைக்களுக்கும் சேர்த்து 260 திட்டங்களின் கீழ் ரூ.3.5 லட்சம் கோடிக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது தடை செய்யப்பட்டுள்ள 101 தளவடாங்கள் உட்பட அடுத்த 5 முதல் 7 ஆண்டில் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் ரூ.4 லட்சம் கோடிக்கான ஒப்பந்ததை பெறும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதுவரை ராணுவ ஆயுதங்களை பொருத்த வரையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளையே இந்தியா சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.    படிப்படியாக...* 2020 டிசம்பரில் இருந்து 69 வகையான தளவாடங்களுக்கு தடை விதிக்கப்படும்* 2021 டிசம்பரில் இருந்து மேலும் 11 வகையான தளவாடங்களுக்கு தடை விதிக்கப்படும்.* 2022 டிசம்பரில் இருந்து அடுத்த கட்டமாக 4 வகையான தளவாடங்களுக்கும், 2023 டிசம்பரில் இருந்து 8 வகையான தளவாடங்களுக்கும், 2024 டிசம்பரில் இருந்து 8 வகையான தளவாடங்களுக்கும் தடை விதிக்கப்படும். * 2025 டிசம்பரில் இருந்து நீண்ட தூர தாக்குதல் திறன் படைத்த கப்பல் ஏவுகணைகளுக்கு தடை விதிக்கப்படும்.என்னென்ன தளவாடங்கள்? இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் 101 தளவாடங்களில் முக்கிய ஆயுதங்கள்:* சிறிய ரக பீரங்கிகள்* நிலத்திலிருந்து வானில் பறக்கும் குறுகிய தூர ஏவுகணைகள்* கப்பல் ஏவுகணைகள்* கடலோர ரோந்து கப்பல்கள்* மின்னணு போர் சாதனங்கள்* அடுத்த தலைமுறை ஏவுகணை கப்பல்கள்* குறுகிய தூர கடல்சார் உளவு விமானங்கள்* பயிற்சி விமானங்கள்* சரக்கு விமானங்கள்* இலகுரக ராக்கெட் லாஞ்சர்கள்* மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர்கள்* ஏவுகணை தடுத்து அழிக்கும் ஏவுகணைகள்* கப்பல்களுக்கான சோனார் அமைப்புகள்* ராக்கெட்கள்* வானிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகள்* இலகு ரக இயந்திர துப்பாக்கிகள்* சிறிய ரக பீரங்கி குண்டுகள்* நடுத்தர வகை துப்பாக்கிகள்* வார்த்தை ஜாலங்கள்பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில், ‘ஆயுதங்களை இறக்குமதி செய்வது பாதுகாப்பு அமைச்சகம்தான். எனவே, இது தனக்குதானே விதித்துக் கொள்ளும் ஒரு  தடை தான். இதை தனது துறை செயலாளர்களுக்கு நிர்வாக உத்தரவாக சொல்ல வேண்டியதைத்தான் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு என்கின்றனர். இறக்குமதி தடை என்பதை வார்த்தை ஜாலங்களாக சொல்கின்றனர். உண்மையில், இதற்கு என்ன அர்த்தம், 2 முதல் 4 ஆண்டு வரை அந்த தளவாடங்களை செய்து பார்ப்போம், அப்புறம் இறக்குமதிக்கு தடை விதிப்போம் என்பதுதானே,’ என விமர்சித்துள்ளார்.* உலக அளவில் கடந்த 8 ஆண்டுகளில் ஆயுதங்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் 3வது நாடு இந்தியா.* அடுத்த 5 ஆண்டில் ஆயுதப் படைக்காக ரூ.97 லட்சம் கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.* உள்நாட்டில் போர் தளவாடங்கள் உற்பத்தி மூலமாக அடுத்த 5 ஆண்டில் ரூ.1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்ட பாதுகாப்பு அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், ரூ.35,000 கோடி ஏற்றுமதி மூலமாக ஈட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை