ரூ.1 லட்சம் கோடி திட்டத்தை துவக்கி வைத்தார் மோடி

தினமலர்  தினமலர்
ரூ.1 லட்சம் கோடி திட்டத்தை துவக்கி வைத்தார் மோடி

புதுடில்லி: விவசாய உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், சிறு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையிலும், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திட்டங்களை, பிரதமர் மோடி, நேற்று துவக்கி வைத்தார். அத்துடன், நாடு முழுதும், 8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு, மொத்தமாக, 17 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது.

அறுவடைக்குப் பிந்தைய விவசாய உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

துவக்க விழா:

இந்த திட்டத்தின் துவக்க விழா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. இந்த விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், விவசாய கூட்டுறவு நிறுவனங்களின் அதிகாரிகள், விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுதும் உள்ள சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைக்கும் நோக்கத்துடன், இந்த நிதி திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிதி திட்டங்களால், அறுவடைக்குப் பிந்தைய விவசாய உள்கட்டமைப்பு திட்டங்கள் பலமானதாக உருவாகும்; அதிகமான வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

ஒரு குறிப்பிட்ட பொருளை விளைவிப்பதில் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், விளைவித்த பொருளை, அறுவடைக்குப் பின் சேகரித்து வைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. இதனால், விவசாய உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதற்காக, இந்த நிதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலப்பைக்கு பூஜை:

குளிர்சாதன கிடங்குகளை அமைப்பது, விளைபொருள் சேகரிப்பு மையங்களை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளுக்காக, இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும். இதன் வாயிலாக, விவசாயத் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் ஏற்படுவதுடன், அது தொடர்பான சட்டச் சிக்கல்களுக்கும் தீர்வு ஏற்படும்.கிராமப்புறங்களில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும், விவசாயம் சார்ந்த புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இந்த திட்டம் பெரிதும் உதவும்.

பல்ராம் ஜெயந்தி தினத்தன்று, இந்த திட்டத்தை துவக்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த நாளில் தான், விவசாயிகள் தங்களின் ஏர் கலப்பைக்கு பூஜை செய்து வழிபடுவர். இந்த திட்டங்களால், அதிகமான தானியங்களை சேகரித்து வைப்பதற்கான, மிகச் சிறந்த மையங்கள் உருவாக்கப்படும். கிராமங்களில், அதிநவீன குளிர்சாதன கிடங்குகள், உணவுப் பொருள் பதப்படுத்தப்படும் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

தற்போது, நம்மிடம் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால், எவ்வளவு இருப்பு வைக்க வேண்டும் என்ற வரையறை, விவசாயிகளை மட்டுமல்லாமல், பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. அளவுக்கு அதிகமான உற்பத்தி இருக்கும் சூழலில் கூட, அத்தியாவசிய பொருட்கள் சட்டம் தொடர்கிறது. எனவே, இந்த சட்டம் இனி தேவைப்படாது. இந்த சட்டத்தால், கிராமப்புறங்களில் சேகரிப்பு மையங்கள் அமைப்பதற்கும், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை அமைப்பதற்கும் முட்டுக்கட்டை ஏற்படுகிறது.

அதிகாரிகள், இந்த சட்டத்தை காரணமாக வைத்து, வியாபாரிகள், முதலீட்டாளர்களை அச்சுறுத்துகின்றனர். இனி, இந்த அச்சுறுத்தலில் இருந்து, வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் சுதந்திரம் கிடைக்கும். தற்போது அளிக்கப்படும் கடன் திட்டத்தால், கிராமப்புறங்களில் அதி நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும். விவசாயம் அல்லாத துறைகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கும், விலை நிர்ணயிப்பதற்கும் உரிமை உள்ளது.

விவசாயிகளுக்கு இந்த வசதி இல்லை. இனி, இந்த பிரச்னை இருக்காது. விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டு வந்த நீதி, இனி, கிடைக்கும். விவசாயிகள், தங்கள் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயிப்பதுடன், எங்கு வேண்டுமானாலும் பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம்.

குளியல் சோப்புகளை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். ஆனால், விவசாயிகள் தங்கள் பொருட்களை, உள்ளூரில் உள்ள சந்தையில் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இனி, இந்த சிக்கல் இருக்காது. மற்ற துறைகளில் இடைத்தரகர்கள் இல்லாதது போல், விவசாயத்திலும் இனி இடைத்தரகர்களுக்கு வேலையில்லை.

'ஒரே நாடு; ஒரே சந்தை' திட்டத்தை அமல்படுத்துவதற்காக, கடந்த ஏழு ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது, அது சாத்தியமாகி உள்ளது. விளைபொருட்களுக்கான சிறந்த சந்தைகளை ஏற்படுத்தும் வகையில், 10 ஆயிரம் விவசாய சங்கங்களும் உருவாக்கப்பட்டு, அவற்றின் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தடையின்றி எடுத்துச் செல்வதற்கு வசதியாக, 'கிஷான் ரயில்' திட்டமும் துவக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான கொரோனா காலத்திலும், விவசாய பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, விவசாயிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதனால் தான், நாட்டில் உள்ள, 80 கோடி ஏழைகளுக்கு, இலவசமாக உணவுப் பொருட்களை வினியோகம் செய்ய முடிந்தது. இவ்வாறு, அவர் பேசினார்.

8.5 கோடி விவசாயிகளுக்கு நேரடி பணப் பரிமாற்றம்:

நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கும், 'பிரதம மந்திரி கிஷான் சம்மன் நிதி' என்ற திட்டம், 2018 டிசம்பரில் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி, விவசாயிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணையாக நிதி உதவி வழங்கப்படும்.

எந்தவித இடைத்தரகர்களின் தலையீடும் இன்றி, நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளிலேயே இந்த தொகை செலுத்தப்படும். இந்த திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து, ஆறாவது தவணையாக நிதி பரிமாற்றத்தை, பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். இதன்படி, 8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு மொத்தமாக, 17 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது.

'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இந்த திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர், ''இடைத்தரகர் தொல்லை, கமிஷன் தொல்லை இல்லாமல், விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

விவசாய உள்கட்டமைப்பு நிதியம்:

பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்த விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த நிதி, விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாய தொழில்முனைவோர் உள்ளிட்ட விவசாயம் சார்ந்து செயல்படுவோருக்கு, கடன்களாக வழங்கப்படும். இதற்காக, 11 பொதுத் துறை வங்கிகளுடன், மத்திய விவசாய அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி, பயனாளர்கள், 3 சதவீத வட்டி குறைப்புடன், 2 கோடி ரூபாய் வரை கடன் உத்தரவாதம் பெற முடியும். நான்கு ஆண்டுகளில் இந்த கடன் தொகை வழங்கப்படும். நடப்பு ஆண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாயும்; அடுத்த மூன்று ஆண்டுகளில், 30 ஆயிரம் கோடி ரூபாயும் வழங்கப்படும். விவசாய பொருள் சேமிப்பு கிடங்குகள், குளிர்சாதன கிடங்குகள் உள்ளிட்ட விவசாய கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்த கடன் வழங்கப்படும்.

மூலக்கதை