பார்லி., மழைக்கால கூட்டத்தொடரை 'ஷிப்ட்' முறையில் நடத்த திட்டம்

தினமலர்  தினமலர்
பார்லி., மழைக்கால கூட்டத்தொடரை ஷிப்ட் முறையில் நடத்த திட்டம்

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரை, 'ஷிப்ட்' முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாள், லோக்சபா கூட்டம்; மறுநாள், ராஜ்யசபா கூட்டம் என்ற வகையிலோ அல்லது காலையில் லோக்சபா; மாலையில் ராஜ்யசபா கூட்டம் என்ற வகையிலோ பார்லிமென்ட்கூட்டத்தை நடத்த அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர்.

அரசியல் சாசன விதிமுறைகளின் படி, அடுத்த மாதம், 23ம் தேதிக்கு முன், மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்பட்டாக வேண்டும். இதை கருத்தில் கொண்டு, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவும், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் பலமுறை ஆலோசனை செய்தனர்.

இந்த ஆலோசனைகளில், ஏராளமான யோசனைகள் முன்வைக்கப்பட்டபோதிலும், இறுதி முடிவு எட்ட முடியாத குழப்பங்களே மிஞ்சின. பார்லிமென்டில், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க போதுமான இடவசதி பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணம்.

வீடியோ கான்பரன்ஸ்


கூட்ட அரங்குகளில், 20 - 30 பேர் அமரும் வகையில், தற்போது பார்லி மென்ட் நிலைக்குழு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, பல நுாறுஎம்.பி.,க்கள் அமர வேண்டிய அவசியம் உள்ளது.அப்போது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது கேள்விக்குறியாகி விடும் என அஞ்சப்படுகிறது.

சபைக்குள் போய் வருவதற்காக இருக்கும் சில வாயில்களுமே கூட, மிகவும் குறுகலானவை. எனவே, நிலைக்குழு கூட்டங்களை போல, பார்லிமென்ட் கூட்டத்தொடரை நடத்துவதில் பெரும் சிரமங்கள் இருப்பதாக கூறப்பட்டன. இதனால் தான், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் கூட்டத்தொடரை நடத்தலாம் என்ற யோசனையை, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு முன் வைத்தார்.

ஆனால், அதை ஏற்பதற்கு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தரப்பில் தயக்கம் இருந்தது. லோக்சபாவை பொருத்தவரை, எம்.பி.,க் கள் நேரில் வந்து, சபை நடைபெறுவதே பொருத்தமானது என கருதியதால், முடிவெடுப்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா செயலகங்கள் ஒன்றிணைந்து புதிய முடிவுக்கு வந்துள்ளன.

அதன்படி, தற்போதைய சபைகளுக்குள்ளேயே கூட்டத்தொடரை நடத்த, ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. சபைக்கு மேலே உள்ள பார்வையாளர் மாடங்கள், பத்திரிகையாளர்கள் மாடம், வெளிநாட்டு விருந்தினர் மாடம், முன்னாள் எம்.பி.,க்கள் மாடம் என, அனைத்து இடங்களிலும், எம்.பி.,க்களை அமர வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக, வசதியான இருக்கைகள், மைக்குகள், அந்த இடத்திலிருந்தே காணும் வகையில் பெரிய 'டிவி'க்கள் என, சில முக்கிய வசதிகளும், மாடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, இரு சபைகளையும், 'ஷிப்ட்' முறையில் நடத்துவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு யோசனைகளும் முன் வைக்கப்பட்டு உள்ளன.

காலையில், நான்கு மணிநேரம் லோக்சபா கூட்டத்தையும், மதியத்துக்கு மேல் நான்கு மணி நேரம், ராஜ்யசபா கூட்டத்தையும் நடத்திக் கொள்ள முடியும்.அதுவும் முடியாமல் போனால், முதல் நாள் லோக்சபா கூட்டத்தையும், மறுநாள் ராஜ்யசபா கூட்டத்தையும் மாறி மாறி நடத்தலாம் என, அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இடப்பற்றாக்குறை


இந்த திட்டத்திலும் இடப்பற்றாக்குறை ஏற்படும் சாத்தியக்கூறு இருந்தால், மைய மண்டபம், பார்லிமென்டில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் போன்ற இடங்களையும் பயன்படுத்திக் கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இங்கிருந்தே, சபை நடவடிக்கைகளில், எந்தவொரு சிரமமும் இன்றி, எம்.பி.,க்கள் பங்கேற்க முடியும்.

சபைக்குள் வரத் தயங்கும் மூத்த எம்.பி.,க்கள், அவர்கள் அமர்ந்திருக்கும் அறைகளில் இருந்தே கூட, முக்கிய விவாதங்களின்போது குறுக்கீடு செய்வதற்கு ஏற்ப, உள்கட்டமைப்பு வசதிகளும் உருவாகி வருகின்றன. தவிர, சபைகளுக்குள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கிலும், லோக்சபாவில் தற்போது எம்.பி.,க்கள் அமரும் இருக்கை வரிசைகளுக்கு இடையே, ஒருவரை ஒருவர் நெருங்க முடியாத படி, பாலிகார்பனேட் சீட்டுகளால் தடுப்புகளும் அமைக்கப்படுகின்றன.

அதேபோல, வழக்கமாக அமரும் இருக்கைகளில் எம்.பி.,க்கள் அமர முடியாது. மாறாக, கட்சிகள் ரீதியாக, மூத்த எம்.பி.,க்கள், பேச வேண்டியவர்களுக்கு மட்டும் முன்னுரிமை தரும் வகையில் இருக்கைகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடையாள அட்டை முக்கியம்


பார்லிமென்டில், எம்.பி.,க்கள் வருவதை துாரத்தில் கண்டாலே, அவர்களை எந்தவித சோதனையும் இன்றி, பாதுகாப்பு அதிகாரிகள் வரவேற்று உள்ளே அனுப்புவர். அதுபோன்ற நடைமுறை இந்த கூட்டத்தொடரில் இருக்காது. முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாகி உள்ளதால், எம்.பி.,க்களின் முகத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கும்.

இதனால், எம்.பி.,க் கள், அமைச்சர்கள் என ஒவ்வொருவரும், நுழைவாயிலில் அடையாள அட்டை, ஆர்.டி., டேக் எனப்படும் பார்லிமென்ட் சிறப்பு அட்டை ஆகிய வற்றை, வெளியே எடுத்து காட்ட வேண்டும்.

எம்.பி.,க்களுக்கு 'காடா' பானம்


கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பல்வேறு மருந்துகள், உணவுகள், நாடெங்கிலும் மக்களிடையே பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. அதே பாணியில், பார்லிமென்டிலும் எம்.பி.,க் களுக்கு, 'காடா' பானம் வழங்கப்படுமெனஅறிவிக்கப்பட்டுள்ளது.

காடா என்றால் கஷாயம் என்று பொருள். கபசுர குடிநீரைப் போல, துளசி,பட்டை, மிளகு, சுக்கு, கிஸ்மிஸ் பழம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கசாயம் இது. 'ஆயுஷ் துறை பரிந்துரைத்துள்ள, ஒரு கப் மூலிகை கஷாயம் விலை, 11 ரூபாய். பார்லிமென்டில் உள்ள கேன்டீன்கள் மூலம் கிடைக்கும்' என்று, எம்.பி.,க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

-- நமது டில்லி நிருபர் -

மூலக்கதை