சிறுபட்ஜெட் படத்தை ஆன்லைனில் பார்த்து தயாரிப்பாளரை காப்பாத்துங்க: அப்புகுட்டி வேண்டுகோள்

தினமலர்  தினமலர்
சிறுபட்ஜெட் படத்தை ஆன்லைனில் பார்த்து தயாரிப்பாளரை காப்பாத்துங்க: அப்புகுட்டி வேண்டுகோள்

புதுமுகம் பாலாஜி, நிகிலா விமல் நடித்துள்ள ஒன்பது குழி சம்பத் என்கிற படம் ஆன்லைனில் வெளிவருகிறது. சிறிய பட்ஜெட் படங்களை ஆன்லைனில் பார்த்து அவர்களை காப்பாற்றுங்கள் என்று அப்புக்குட்டி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். நம் எல்லோரின் வேண்டுதலும் இப்போது, கொரோனா ஒழிய வேண்டும். எல்லோரும் லாக்டவுனில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதுதான். விரைவில் இது நடக்கும் என்று நம்புவோமாக. கொரோனாவால் எல்லா தொழில்களைப் போல, திரைப்படத் தொழிலும் முடங்கித்தான் கிடக்கிறது.

இக்காலகட்டத்தில் நமக்கிருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமாவும் சமூக ஊடகங்களும்தான். பழைய சினிமாக்களை, உங்களுக்கு பிடித்த சினிமாக்களை, காமெடி க்ளிப்பிங்ஸ்குகளை ஆன்லைன் தளத்தில் பார்த்து பார்த்து ரசித்திருப்பிர்கள். சிலர் சலித்தும் போயிருப்பீர்கள் ஆன்லைனும் இல்லையென்றால் நமக்கு பைத்தியமே பிடித்திருக்கும்.

இச்சூழலில்தான் நான் நடித்துள்ள 'ஒன்பது குழி சம்பத்' என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ல் வெளிவருகிறது. அதுவும் ஆன்லைன் தளத்தில் வெளிவர இருக்கிறது.வீட்டில் முடங்கிக் கிடந்தாலும் உங்களை உயிர்ப்போடு வைத்திருந்தது சினிமாவும் உறவுகளும் தான். அந்த சினிமா வழியே உங்களை, உங்கள் வீட்டிற்கே வந்து இப்படத்தின் மூலம் சந்திக்க இருக்கிறேன்.

கிராமத்தில் போக்கிரியாகத் திரிந்து கொண்டு, கோலி குண்டு விளையாடிக்கொண்டு திரியும் இளைஞனின் கதை. அவனுடைய வாழ்வில் ஒரு பெண் நுழைகிறாள். அதனால் அவனுடைய வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன? அப்பெண்ணின் வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன? என்பதை சொல்லும்படம் இது.

இந்த படத்தில் ஹீரோவின் நண்பனாக 'சாமிநாதன்' என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன் என்பதைவிட, வாழ்ந்திருக்கிறேன் என்பதே உண்மை. சிறுபட்ஜெட் படங்கள் இப்போது ஆன்லைனில் வெளிவருவதை தவிர வேறு வழியில்லை. இதுபோன்ற படங்களை ஆன்லைனில் பார்த்து தயாரிப்பாளர்களை காப்பாற்றும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். என்கிறார் அப்புக்குட்டி.

மூலக்கதை