அக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்

தினமலர்  தினமலர்
அக்ஷய், தீபிகா படுகோனே  இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்

'இந்தியா டுடே' சமீபத்தில் அரசியல், சினிமா உள்ளிட்டவற்றில் 'மூட் ஆப் த நேஷன்' என்ற தலைப்பில் சிறந்து விளங்குபவர்களைப் பற்றிய ஓட்டெடுப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கெனவே, சில அரசியல் சர்வேக்களின் முடிவெடுகளை வெளியிட்டார்கள்.

அடுத்து இந்தியத் திரையுலகில் நம்பர் 1 ஹீரோயின் யார் என்ற சர்வே முடிவை வெளியிட்டுள்ளார்கள். அதன்படி ஹிந்தி நடிகையான தீபிகா படுகோனே மொத்தமாகப் பதிவான ஓட்டுகளில் 16 சதவீதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

14 சதவீதம் பெற்று பிரியங்கா சோப்ரா, 13 சதவீதம் பெற்று காத்ரினா கைப், 10 சதவீத ஓட்டுகள் பெற்று ஐஸ்வர்யா ராய் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

கடந்த முறை இரண்டாமிடத்தைப் பிடித்த அனுஷ்கா சர்மா இந்த முறை 9 சதவீத ஓட்டுகள் பெற்று ஐந்தாமிடத்தைத்தான் பிடித்துள்ளார். ஆலியா பட், கங்கனா ரணவத் ஆறாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஹீரோக்களில் அக்ஷய்குமார் 24 சதவீத ஓட்டுகள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். 23 சதவீதம் பெற்று அமிதாப்பச்சன் இரண்டாவது இடம், 11 சதவீதம் பெற்று ஷாரூக்கான் 3வது, 10 சதவீதம் பெற்று சல்மான் கான் 4வது, 6 சதவீதம் பெற்று அமீர்கான் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மற்றொரு சர்வேயில், கொரானோ ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டால் 53 சதவீதம் பேர் தியேட்டர்களுக்குப் போக மாட்டோம் என்றும் 39 சதவீதம் பேர் போவோம் என்றும், 8 சதவீதம் பேர் எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மூலக்கதை